GuidePedia

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் மூன்று, புதிய அரசாங்கத்தின் ஜனநாயக முறைகளை பின்பற்றும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளன. எனினும் அரசாங்க கட்சியில் இணைவதாகத் தெரிவிக்கவில்லை. 

இது குறித்து, இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில், 'தொடர்ந்தும் நாம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இடதுசாரி கட்சியாக இருந்துகொண்டு புதிய அரசின் தேர்தல் வாக்குறுதிகளை செயற்படுத்த அழுத்தம் கொடுப்போம்' எனக் கூறினார்.   

முன்னாள் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என பல தடைவைகள் கூறிவந்த நிலையிலேயே இவ்வாறானதொரு கருத்தை நேற்று தெரிவித்தார். 'நாங்கள் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக ஒழிக்க விரும்புகின்றோம். ஆனால், புதிய அரசாங்கம் நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க நடவடிக்கை எடுத்தால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவும் தயார். 

அத்தோடு, ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பள உயர்வை வழங்குவதற்கும் நாம் அழுத்தம் கொடுப்போம்' என அவர் தெரிவித்தார். இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகும். எனினும், நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்த கொண்டுவந்த தீர்மானத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருந்தன. அப்போதே இக்கட்சிகளின் மத்திய குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரண்டு வருடங்கள் இருக்கத்தக்கதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை எதிர்த்து அறிக்கை சமர்ப்பித்திருந்தன. 



 
Top