GuidePedia

‘உலகெங்கும் வேர் பரப்பி வாழும் என் உயிர்க்கினிய தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். தமிழர்களின் பாரம்பரிய பெருமை கொண்ட இந்நன்நாளில் வறுமையை விரட்டியும் செழிப்பை வரவேற்றும் புதுவாழ்வு பொங்கிச் சிறக்க வேண்டும்’ என நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் தனது புரட்சிகரமாக பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கதிரவப் பொங்கல் படைத்து உறவுகளைக் கொண்டாடி எவ்வித வேறுபாடுமின்றி எல்லோருடனும் இணக்கம் பாராட்டி தமிழர்களாகிய நாம் எத்தகைய இனிமை மனம் படைத்தவர்கள் என்பதை இந்த நன்நாளில் உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். நமக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகளைக் கொண்டாடி அவற்றுடன் அன்பு பகர்தல் வேண்டும்.
இயற்கையை வணங்குதல், பிற உயிர்களைக் கொண்டாடுதல், எல்லோருடனும் இணக்கம் பாராட்டுதல் என மனம் முழுக்க நல்லெண்ணங்களை விதைத்து, அதன்வழியே எந்நாளும் நடக்க பொங்கல் நாளில் உள உறுதி ஏற்க வேண்டும்.
உலகுக்கே படியளந்த விவசாயப் பெருமக்களின் நிலை இன்றைய சூழலில் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சினை, விலைவாசி உயர்வு என பலவிதமான நெருக்கடிகளில் விவசாயிகள் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருமித்த போராட்டங்களாலும் இடைவிடாத முயற்சிகளாலும் நிச்சயம் நம் வாழ்வு மாறும் என்பதை பொங்கல் தினத்தில் நல்லெண்ண நம்பிக்கையாக மனதில் கொள்ள வேண்டும்.
கட்டிக் கரும்பாக ஒவ்வொரு விவசாயின் வாழ்வும் இனிக்கும் நாள்தான் அனைத்து தமிழர்களுக்குமான உண்மையான பொங்கல் நாளாக இருக்கும். இயற்கையின் மகத்துவ மனிதர்களாக மண்ணையும் விண்ணையும் கொண்டாடி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, வறுமை புலப்படாத, தீவினைகள் அற்ற புதிய பூமியின் முதல் நாளாக வரும் தைப்பொங்கல் ஒவ்வொரு தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும்.
பொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள். அநீதிக்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக, ஒடுக்குமுறைக்கு எதிராக, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, மதுவுக்கு எதிராக, பசி, பட்டினிக்கு எதிராக, இலஞ்ச ஊழலுக்கு எதிராக, மொழிச்சிதைவுக்கு எதிராக, மண் அபகரிப்புக்கு எதிராக, இன அழிப்புக்கு எதிராக, உரிமைப் பறிப்புக்கு எதிராகப் பொங்குங்கள் தமிழர்களே.. பொங்குங்கள். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கட்டும் புரட்சி பொங்கல்! என்றுக் குறிப்பிட்டுள்ளார்.



 
Top