பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் இலங்கை விஜயத்தினை முன்னிட்டு கொழும்பு – நீர்கொழும்பு வீதி இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரை மூடப்பட்டிருக்குமென, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக வீதியில் அனைத்து வாகனங்களும் கட்டணம் எதுவுமின்றி பயணிக்கமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முச்சக்கரவண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களும் அதிவேக வீதியைப் பயன்படுத்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாப்பரசர் பிரான்சிஸ் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.
அங்கிருந்து பழைய நீர்கொழும்பு வீதியூடாக மோட்டார் வாகன பவனியாக கொழும்பிற்கு அழைத்துவரப்படவுள்ளமையினால், மக்கள் வீதியின் இரு மருங்கிலும் ஒன்றுகூடி அவரை வரவேற்கமுடியும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆராதனை மற்றும் முக்திப்பேறு பெற்ற ஜோசப் வாஸ் அடிகளாருக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை காலை 8.30 மணிக்கு காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கு, மக்கள் காலை 6.30 மணிக்கு காலிமுகத்திடலுக்கு வருகை தரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மக்களை பொதுப் போக்குவரத்துச் சேவைகளை பயன்படுத்துமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாப்பரசரின் வருகையை முன்னிட்டு 24 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 21 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடவுள்ளதுடன், 3 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மடுவில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
பாப்பரசரின் வருகை தொடர்பில் பொதுமக்கள் மேலதிக தகவல்களை, பின்வரும் தொலைபேசி இலக்கங்களில் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் :- 011 3024272, 011 3024273, 011 3024275, 011 3024276, 011 3024277
