GuidePedia

ஆசிரிய உதவியாளர் நியமனத்தை நூறு நாள் வேலைத்திட்ட காலத்திலேயே வழங்கப்படவேண்டும்

மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கை.

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் பொருட்டு வழங்கப்படவிருந்த ஆசிரிய உதவியாளர் நியமனத்தை புதிய அரசாங்கம் தனது நூறு நாள் வேலைத்திட்டத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என மத்திய மாகாணசபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான கணபதி கனகராஜ் புதிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெருந்தோட்டப்பாடசாலைகளின் ஆசிரியர் தேவையை நிவர்த்திகுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் விடுத்திருந்த வேண்டுகோளை ஏற்று வர்த்தமாணி வெளியிடப்பட்டதிலிருந்து, போட்டிப் பரீட்சை வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது பரீட்சைகள் திணைக்களத்திடமிருந்து பரீட்சை பெறுபேறுகளை பெற்று நேர்முகப்பரீட்சையை நடத்தி நியமனம் வழங்கவேண்டிய தருவாயில் புதிய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றுள்ளது.

பெரும்பாலான பின்தங்கிய பெருந்தோட்ட பாடசாலைகளில் பாடரீதியிலான ஆசிரிய தட்டுப்பாட்டை இந்த நியமனத்தின் ஊடாக நிவர்த்திக்க முடியுமென்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேலையில் பரவலாக மலையக தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு கட்டிட, தளபாட, விஞ்ஞான ஆய்வுகூட தேவைப்பாடுகளும் பெருமளவில் காணப்படுகின்றது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நூறு நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார். இவ்வேலைத்திட்டத்தில்; மலையகமும் உள்வாங்கப்படுமென எதிர்பார்க்கிறோம். மலையக பிரதேசங்களில் உடனடியாக திர்க்கப்படவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுல் மலையக மாணவர்களின் கல்வித்தேவைகளை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர் உதவியாளர் நியமனத்தை வழங்குவதனூடாக மலையகத்தில் தொழிலற்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் ஒரு பிரிவினரின் தொழிற்பிரச்சினையும்ää மற்றும் ஆசிரிய தேவையின் ஒரு பகுதி என்பவற்றிற்கு தீர்வுகாணமுடியும். என்பதை அரசு கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.




 
Top