GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
“நாட்டில் நம்பிக்கை தரும் மாற்றம் ஒன்று நடந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் நமது முஸ்லிம் அரசியலையும்தரமிக்க ஒன்றாக மாற்றியமைப்பதற்கு நாம் தொடர்ந்தும் உழைக்கவேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியினர் பெற்றுக் கொண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் நடாத்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் உரையாற்றும்போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் மகிழ்ச்சியினை மக்களுடன்பகிர்ந்து கொள்ளும் பல்வேறு நிகழ்வுகளை கடந்த இரண்டு தினங்களாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடிப் பிரதேசத்தில் நடாத்தியது.
பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் உரையாற்றும்போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
'கடந்த 5 வருடங்களாக இந்நாட்டு மக்கள் ஒரு அராஜக ஆட்சியின் வேதனைகளை அனுபவித்து வந்தனர். பொருளாதாரக் கஸ்டம், நிருவாக பாரபட்சங்கள், இனவாத அச்சுறுத்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள், சிறு பான்மை மக்கள் மீதான இனவாதத் தாக்குதல்கள் என்று மக்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளமானவைகளாகும்.
எனவேதான், இந்த மோசமான ஆட்சியை மாற்றியமைத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்காக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பொரும்பான்மை ஆதரவினை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இதனை, இன மத மொழி பேதங்கள் எதுவுமின்றி நாட்டு மக்கள் எல்லோருமே ஒரே உணர்வுகளுடனும், ஒரே இலட்சியத்துடனும் செய்து முடித்திருக்கிறார்கள். பொது எதிரணியின் வெற்றி நாட்டு மக்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சியையும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது. இந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கியபொது எதிரணியில் நீண்ட கால பங்காளியாக இருந்து, இந்த வெற்றிக்காக உழைத்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்பார்த்த மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
இந்த மாற்றம் ஏன் அவசியப்பட்டது என்பதனை நாம் மீண்டும் ஒரு முறை மீட்டிப் பார்ப்பது பொருத்தமானதாகும். அந்தவகையில் மக்கள் உணர்வுகளை மதிக்காத தனிநபர் அராஜகத் தலைமை, ஊழல் மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள், இனவாத, பிரதேசவாத, பாரபட்சங்கள், அரசியல் வன்முறைகள் என்ற பல்வேறு காரணிகளை நாம் அடையாளப்படுத்தலாம். தேசிய மட்டத்தில் ஆட்சி மாற்றம் ஒன்றை அவசியப்படுத்திய அதே காரணிகள் நமது முஸ்லிம் சமூகத்தின் அரசியலிலும் தாராளமாக இருக்கின்றது என்பதனை நாம் மறந்து விடக்கூடாது.
அண்மையில் நமது சகோதர சமூகத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர், முஸ்லிம் அரசியலைப் பற்றி கவலையுடன் ஒரு விடயத்தை சொன்னார். 'இத்தனை முஸ்லிம் கட்சிகளும் பல்வேறு அரசியல்வாதிகளும் இருந்த போதிலும் கூட தரமான முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரையும் எம்மால் காணமுடியவில்லை' என அவர் ஆதங்கப்பட்டார். நமது அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இது ஒரு உண்மையே.
எனவேதான், தேசிய அளவில் எற்பட்டிருக்கும் மாற்றத்தோடு எல்லாம் சரியாகி விட்டது என்ற மனோ நிலை நமக்கு வந்து விடக்கூடாது. முஸ்லிம் அரசியலில் நிலவும் சீரழிவுகளுக்கும், பிற்போக்குத்தனங்களுக்கும் சுயநல, சமூக விரோத செயற்பாடுகளுக்கும் தீர்வான ஒரு புதிய அரசியல் மாற்றம் ஒன்றினை நம் சமூகத்தில் உருவாக்குவதற்காக நாம் தொடர்ந்தும் உழைக்க வேண்டும். முற்போக்கான, நாகரீகமான, மக்களுக்கு விசுவாசமான ஒரு புதிய அரசியல் கலாச்சாரமும் ஒரு புதிய அரசியல் தலைமைத்துவ கட்டமைப்பும் ஒரு புதிய அரசியல் வழிமுறையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அந்த வகையில் முஸ்லிம் அரசியலை தரமிக்க ஒன்றாக சீரமைப்பதற்கான உழைப்பபை நாமெல்லோரும் தொடாந்து செய்தாக வேண்டும்.'



 
Top