GuidePedia

இன்று மு.கா இற்கு முக்கிய பதவிகள் வழங்கப்படாது விடுகின்ற போது “மு.கா தலைவர் தன் பதவிக்கு உலை வைத்து விடும் என்பதால் கட்சி உறுப்பினர்கள் முக்கிய பதவிகளினை எடுக்க விடாமல்  தடுக்கின்றார்” என்ற கருத்தினைத் தூவி அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவத்தினை நலிவடையச் செய்ய பலரும் முனைகிறார்கள்.இது இன்று நேற்று அல்ல காலா காலமாக கூறப்படும் ஒன்று தான்.அமைச்சர் ஹக்கீமினது ஆளுமை மிக்க தலைமைத்துவமே இன்று மு.கா இனது இருப்பைத் தக்க வைத்துள்ளது என்பதாலேயே மு.கா தலைவர் மீது பலரும் சேறு பூசக் காரணம் எனலாம்.

தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சை மு.கா தலைவர் தடுக்கின்றார் என்ற கருத்து நிலவுகிறது.இக் கருத்து சரியானதா என்பதனை அறிய கடந்த கால ஒரு வரலாற்றை எடுத்து நோக்குவோம்.கடந்த கிழக்கு மாகாண சபையில் தனித்து யாரினாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை தோற்றம் பெற்ற போது மு.கா உம் அரசும் இணைந்து ஆட்சியமைத்தது.அத் தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ தனது கட்சி வெற்றி பெற்றால் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் விநாயக மூர்த்தி முரளிதரனை முதலமைச்சராக நியமிக்க உள்ளதாக கூறி இருந்த போதிலும் சு.க சார்பாக முஸ்லிம் முதலமைச்சரே  நியமிக்கப்படுபட வேண்டும்  என்ற மு.கா  கோரிக்கைக்கு அமையவே முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்பட்டார்.

தன் கட்சி உறுப்பினருக்குக் கொடுத்தால் அது தன்னைப் பாதிக்கும் என்றால் முஸ்லிம்களிற்கு விட்டுக் கொடுத்தால் அது முழுக் கட்சியையும் அல்லவா பாதிக்கபோகிறது?நீங்கள் கூறுவது போன்று சிந்தனை கொண்டவர் இவ்வாறு செய்திருப்பாரா? அன்று அமைச்சர் பதவி மு.கா இற்கு வழங்கப்படாத போதும் இக் காரணத்தினேயே கூறினார்கள்.இன்று அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் வழங்கப்பட்டாலும் அதனை ஏற்கும் நிலையில் மு.கா உள்ள போது இவ்வாறு குற்றம் சுமத்துவது எவ்வாறு நியாயமாகும்? இன்று முதலமைச்சைப் பெறவே மு.கா இத்தனை பிரயத்தனங்களைச் செய்கிறது என்பதனை மறந்து விடக் கூடாது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.    



 
Top