புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிட உள்ளதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி புதிய கூட்டணி ஒன்றில் போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சாதாரண ஓர் அரசியல் கூட்டணியை வைத்துக்கொள்ள தமது கட்சி விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் அரசியல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென விரும்பிய போதிலும் அவர்கள் அரசியலில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸ அரசாங்கம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவ்வாறானவர்கள் சுதந்திரமாக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நபர்களை ஒன்றிணைத்து புதிய ஓர் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஓர் கூட்டமைப்பை அமைத்துக்கொள்ள சாத்தியம் கிட்டாவிட்டால் ஜே.வி.பி எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்து போட்யிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.வி.பி கட்சிக்கு மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதை காணப்பட்ட போதிலும், அவற்றை தேர்தல்களில் வாக்கு வங்கிகளாக மாற்றிக்கொள்ள இதுவரையில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.