GuidePedia

( எஸ்.அஷ்ரப்கான் )

இந்தத் தேர்தலில் சிறுபான்மை மக்கள் பெரும் செய்தியை இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்குச் சொல்லியிருக்கின்றார்கள். தங்களின் உரிமைகள் என்கின்ற விடயத்தில் கைவைத்தால், உரிமைகள் மறுக்கப்படுகின்றபோது அந்த ஆட்சியை துாக்கி வீசுவதற்கும் தயங்கமாட்டார்கள். என்ற செய்தியை தெளிவாக தமது வாக்குப்பலத்தின் மூலம் சொல்லியிருக்கின்றார்கள். என்று ஐக்கிய தேசியக் கட்சியின் அம்பாரை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
அவர் ஜனாதிபதியின் வெற்றி தொடர்பாக மேலும் கருத்து வெளியிடும்போது,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாட்டினுடைய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன அவர்கள் மக்களுடைய ஆணை மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதற்கு காரண கர்த்தாவாக இருந்த இந்நாட்டு மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
விசேடமாக இந்த வெற்றியின் பங்காளிகளாக இருந்த  நாட்டின் சிறுபான்மை சமூகங்களான தமிழ், முஸ்லிம் சமூகத்தினையே சாரும். ஜனாதிபதியினுடைய  வெற்றியில் சிறுபான்மைகளினுடைய சுமார் 5 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் விழுந்ததன் காரணமாகத்தான் சிங்கள பகுதிகளிலிருந்து வேட்பாளர்களுக்கு சமத்துவமாக அளிக்கப்பட்ட வாக்குகள் மூலமாக கிட்டத்தட்ட இருவரும் சமமான நிலையிலிருந்தபோது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினரின் வாக்குகள் அமைந்திருந்தது.
ஆனால் இன்று ஒரு சில அரசியல்வாதிகள் தங்களுடைய முயற்சிகள் மூலமாக முஸ்லிம் சமூகத்தினுடைய  வாக்குகளை நாங்கள் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரிப்பதற்கு முன்னரே தபால் வாக்குகள் அளிக்கின்றபோது கல்மனைத்  தொகுதி மக்கள் விசேடமாக 6 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அளித்திருந்தார்கள். பிரதான கட்சிகள் வந்தாலும்,  வராவிட்டாலும் முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகள் ஆட்சிமாற்றத்தை வேண்டியே நின்றது. என்பதை எல்லோரும் நன்கறிவர். எந்த அரசியல் தலைவர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை ஆதரிக்கச் சொல்லியிருந்தாலும் மக்கள் அந்த கதையை ஏற்றிருக்க மாட்டார்கள். என்ற நிலை இருக்கின்றபோது, வெற்றியின் முயற்சியாளர்களாக தங்களை காட்டிக்கொள்கின்ற வேலையை அரசியல்வாதிகள் கைவிட்டு விட்டு தங்களது அரசியல் பயணத்தை தொடர முன்வர வேண்டும். அரசியல் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்க முன்பே மக்கள் தீர்மானித்த ஒரு ஜனநாயகத்  தேர்தலே இந்த ஜனாதிபதித் தேர்தலாகும்.

உண்மையில் மைத்திரியின் வெற்றிக்கு கல்முனை பிரதேசத்தில் அதிகமாக உழைத்த பெருமை வர்த்தகர் ஏ.எம். பைரூசையே சாரும். அவர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றார். அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்காறன் என்ற வகையில் நான் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதுபோன்று எமது மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கின்ற அபிவிருத்தியில் பங்கெடுக்கின்ற நிலையை எமது கல்முனை பிரதேச மக்களுக்கான பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய முன்வர வேண்டும். அதற்கான முன்மொழிவுகளை நாம் புதிய ஆட்சியில் வெளிக்கொண்டுவருவோம். என்றும் குறிப்பிட்டார்.



 
Top