GuidePedia

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி புதிய முதலமைச்சரை நியமிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஏற்பட்டுள்ள அரசியல் ரீதியான இழுபறி நிலையை தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான முறுகலாக காண்பிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சமயங்களுக்கிடையிலான கருத்தாடல் மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஒரு வார காலமாக மேற்படி இரு கட்சிகளுக்குமிடையே கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும் இதுவரை இணக்கப்பாடு ஒன்று எட்டப்படவில்லை.

இந்நிலையில் தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இவ்விரு கட்சிகளுக்குமிடையிலான அரசியல் ரீதியானதும் பதவி ரீதியானதுமான இழுபறி நிலையினை இரு சமூகங்களுக்குமிடையிலான போட்டியாகவும் முரண்பாடாகவும் காண்பித்து விரிசல் நிலையினைத் தோற்றுவிப்பதற்கு சில சக்திகள் முனைவதை அவதானிக்க முடிகிறது.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு இனங்களுக்கிடையே சுமுகமான உறவைக் கட்டியெழுப்புவதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட உறுதிபூண்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கி கிழக்கில் அமைதியின்மையைத் தோற்றுவித்து அதன் மூலம் அரசியல் ரீதியாக குளிர்காய்வதற்கு முனைவதானது மிகவும் கண்டிக்கத்தக்க செயற்பாடாகும்.

கிழக்கில் தமிழரோ முஸ்லிமோ யார் முதலமைச்சராக வந்தாலும் அதனை விட்டுக் கொடுப்புகளுடன் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு அங்கு வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

எனவே இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளும் ஏனைய தரப்பினரும் சமூகங்களுக்கிடையில் பிரிவினையைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம் என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top