GuidePedia

(க.கிஷாந்தன்)

மலையக மக்கள் அரசியல் அறிவுடன் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்திருப்பதாகவும் அதற்கு தாம் மதிப்பளிப்பதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மக்களுடன் இணைந்து, சுதந்திரமாக சிந்தித்து மலையக மக்கள் வாக்களித்துள்ளதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னால் பொருளாதார பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக, மலையகத்தில் தங்களின் தொழிற்சங்கத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை நிபந்தனையின்றி ஆதரித்த, சிறுபான்மை சமூகமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல்கட்சி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகும்.

எனினும், நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகள் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கே அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிபால சிரிசேன அரசாங்கம் அழைப்பு விடுத்தால் இந்த புதிய அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் இணைந்துக்கொள்ள வாய்ப்பு எதுவும் இருக்கின்றதா என பிபிசி இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தலைவா் முத்து சிவலிங்கமிடம் கேட்ட போது !   (அது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்) என அவா் பதிலளித்தமை குறிப்பிடதக்கது.

நன்றி - பிபிசி



 
Top