GuidePedia

இயற்கையுடன் மனிதன் கொண்டுள்ள பிணைப்பை பலப்படுத்தும் தெய்வ வழிபாடான பொங்கல் திருநாளில் இலங்கை வாழ் இந்து மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
‘இலங்கை வாழ் இந்துக்கள் உலகில் வாழும் தமது தமிழ் சமயத்தவர்களோடு இணைந்து இன்று தமது சமயப் பஞ்சாங்கத்தில் மிக விஷேடமான பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
தை மாதத்தின் முதல் தினத்தைக் குறித்து நிற்கும் இவ்விஷேட பண்டிகையான தைப்பொங்கல், சிறந்த அறுவடையைப் பெற்றுக் கொண்டமைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காகக் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையின் விஷேட அம்சமான பாலும் சோறும் பொங்க வைப்பதனைக் குறித்து நிற்கும் பொங்கலானது, விவசாயம் மற்றும் வாழ்வாதாரத்தின் எல்லா அம்சங்களிலும் சூரிய பகவானிடமிருந்து கிடைத்த ஆசீர்வாதத்திற்கு நன்றி செலுத்துவதாய் அமைகிறது. அறுவடையின் முதற்பகுதி சூரியபகவானுக்கு படையல் செய்யப்படும் போது இது ‘சூரிய மாங்கல்யமாகவும்’ கருதப்படுகிறது.
இப்பண்டிகையானது, சிறந்த அறுவடைக்காக சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதிலும் எதிர்வரும் வருடத்திலும் சிறந்த அறுவடையும் வெற்றிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் மிகுந்த அன்பு மற்றும் புரிந்துணர்வுடன் குடும்பங்களையும் சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றது.
இப்பண்டிகையின் இரண்டாவது நாள் நிலத்தை உழுதல், பயணம் செய்தல் மற்றும் பால், உரம் போன்றவற்றுக்காகப் பயன்படும் தமது கால்நடைகளுக்கு கௌரவமளிக்கும் ஒரு விஷேட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
மக்கள் மத்தியில் சமாதானம், ஐக்கியம் மற்றும் சுபிட்சத்திற்காக அன்பு மற்றும் காருண்யத்துடன் எனது பதவிக் காலத்தின் ஆரம்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.



 
Top