GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி சரியான பாதையில் பயணிக்குமானால் அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தயார் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்று காலை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.
சந்திப்புக்குறித்து, த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச்சேவைக்குக் கருத்து வெளியிடுகையில்,
‘தேசிய அரசாங்கத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைய வேண்டும் என்று மீண்டும் அழைப்பு விடுத்தார்கள்.
அதற்கு தலைவர் சம்பந்தன், நாங்கள் சேர மாட்டோம் என்று சொல்லவில்லை. தற்போது சேர மாட்டோம். ஆனால், புதிய அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்குமானால் சேருவது குறித்து பரிசீலனை செய்வோம் எனக்கூறினார்’.
அத்துடன் நாம், ஐந்து கோரிக்கைகளையும் புதிய அரசாங்கத்திடம் முன்வைத்தோம். அவையாவன,
1. பாதுகாப்புத் தேவைக்காக அல்லாமல் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் நிலங்கள் மீளக்கையளிக்கப்பட வேண்டும்.
2. நீண்ட கால அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
3. வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள், செயலாளர்கள், அரசாங்க அதிபர்கள், அபிவிருத்திக்குழுக்களின் தலைவர்கள் மாற்றப்பட வேண்டும்.
4. கடந்த அரசாங்கத்துடன் சேர்ந்திருந்து எம் மக்களுக்கு தொல்லைகொடுத்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் புதிய அரசாங்கத்தில் உள்வாங்கப்படக்கூடாது.
5. நீண்ட கால அரசியல் தீர்வு குறித்து ஒரு குழுவை நியமித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எனவே, இந்தக் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற அரசாங்கம் ஆவண செய்யும் என நம்புகின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.
இன்றைய சந்திப்பில் அரசாங்கத்தரப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ன ஆகியோர் உடனிருந்தனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தலைவர் இரா சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.



 
Top