(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
எந்தவொரு விடயத்தையும்
நேர்மையாக சிந்தித்து செயற்படவும், அதில் வெற்றி கொள்ளவும்
தெரியாத சில அரசியல்வாதிகளும் அவர்களின் அடிவருடிகளும், பிரதியமைச்சுப்
பதவிக்கு அலைந்து திரிந்து, எத்தனை
பிரதியமைச்சர்கள் கட்சிக்கு கிடைக்கப் போகிறது? அதை யார் யாருக்குக்
கொடுப்பது? என்பதில்
மு.கா தலைவர் இன்னும் முடிவெடுக்காத சூழ்நிலையில், குறித்த ஒருவருக்கு
பிரதியமைச்சுப் பதவி வழங்குவதை நான் தடைசெய்வதாக வெளிவந்திருக்கும்
இட்டுக்கட்டப்பட்ட செய்தி கண்டு எனக்கு வியப்பும் வேதனையுமாக இருக்கிறது.
பிரதேசவாதத்தை தலை
முழுக்க சுமந்து கொண்டு அதையே தனது மூலதனமாக்கி, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை என்ற
பாகுபாட்டில் தன்னை நிலைப்படுத்தி, வஞ்சக அரசியல் செய்பவரை
மக்கள் நன்றாக அடையாளம் கண்டு விட்டனர். அதனால், என்னை பலிகொடுத்து, தங்களது சரிவினை சரி
செய்து கொள்ள முயற்சிக்கின்றனர். அக்கரைப்பற்றில் எனக்குச் சாதகமாக
ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம், தனக்கு அச்சுறுத்தலாக
வந்து, எதிர்வரும்
பொதுத் தேர்தலில் நான் களமிறக்கப்பட்டு, அதிகமான வாக்குகளை
எடுத்து, அவர்களுக்கு
சவாலாகி விடுவேன் என்று அறிந்து, என்னில் சேறுபூசி என்னை
மக்கள் மத்தியில் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள்.
கல்முனை மண்ணிலுள்ள
மக்கள் இவர்களின் நாடகங்கள் பலதை கடந்த காலங்களில் கண்டிருக்கிறார்கள். மேடைகளில்
இவர்கள் விட்ட முதலைக் கண்ணீரை கண்டு களித்திருக்கின்றனர். அதனால், இவர்கள் பேசும்
பிரதேசவாதம், என்ன
நோக்கத்தில் பேசப்படுகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்.
அட்டளைச்சேனை
மண்ணுக்குக் கிடைக்கவிருந்த பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை மு.கா வை
சேர்ந்த ஒரு எம்.பி க்கு கிடைக்காமல் தடுத்தவர் யார்? பொத்துவில் மண்ணுக்குக்
கிடைக்கவிருந்த பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை மு.கா வை சேர்ந்த ஒரு
எம்.பி க்கு கிடைக்காமல் தடுத்தவர் யார்? இறக்காமம் மண்ணுக்குக்
கிடைக்கவிருந்த பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை மு.கா வை சேர்ந்த ஒரு
எம்.பி க்கு கிடைக்காமல் தடுத்தவர் யார்? சம்மாந்துறை
மண்ணுக்குக் கிடைக்கவிருந்த பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பதவியை மு.கா வை
சேர்ந்த ஒரு எம்.பி க்கு கிடைக்காமல் தடுத்தவர் யார்? என்பவற்றை நான்
வெளிப்படுத்தினால் என் பழி சுமத்துபவர்களின் சாயம் வெளிக்கும். அதனை என்னை செய்ய
வைக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்னுமின்னும் தங்களது
பலவீனத்தை மூடிமறைக்க என்னை பயன்படுத்த நினைத்தால், இது போன்ற பல விடயங்களை
அம்பலப்படுத்த வேண்டி வரும். முடிந்தால் அவற்றிற்கு பதில் கூறிப் பார்க்கட்டும்.