கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று காலை புறக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபின்னர் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தல் காலத்தில் புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி மதியம் 3.30 மணியளவில் புதுக்கடை பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட முக்கிய வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பைரூஸ் ஹாஜியின் குழுவினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது முஜிபுர் ரஹ்மானின் ஆதரவாளர்கள் தனது காரியாலயத்தை சேதப்படுத்தியதாக பைரூஸ் ஹாஜியாரினால் பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸாரினால் முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக “தேர்தல் சட்டங்களை மீறியதாகவும், பிரதான வீதியில் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும்” தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் முஜிபுர் ரஹ்மான் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள், பைரூஸ் ஹாஜியாரினால் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டிற்கும், பொலிஸாரினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதனைதொடர்ந்து மீண்டு ஒருமுறை குறித்த முறைப்பாடுதொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, முஜிபுர் ரஹ்மானை ஒருலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்தார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அறிவித்தது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் சார்பில் சட்டத்தரணிகளான அஜித் பத்திரன், யூ.எல்.மர்சூக் மற்றும் அஹமட் ஹுசைன் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
