GuidePedia

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை பங்கீடு தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு காணப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய அமைச்சரவையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவிகள் தொடர்பாக இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் டபிள்யூ.டி.ஜே.செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அமைச்சரவை தொடர்பாக இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையை 45 ஆக மட்டுப்படுத்த வேண்டும் என நிலைப்பாட்டில், தமது கட்சி இருப்பதாகவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அமைச்சரவையின் சுகாதார அமைச்சு உள்ளிட்ட மேலும் பல அமைச்சுக்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது இந்த விடயத்தில் இணக்கபாடு காணப்படவில்லை.

இந்த நிலையில் அமைச்சரவை பங்கீடு தொடர்பிலான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top