GuidePedia

ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவர்களில் மூன்று பேர் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் தற்போது லண்டனில் வசித்து வரும் இலங்கையாராவார் என புலனாய்வுத் திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
தாஜூடின் கொலையாளிகள் இத்தாலி தப்பிச் சென்றுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் மூன்று ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.
சந்தேக நபர்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் எதிர்வரும் வாரங்களில் இவர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.
லண்டனில் வசித்து வரும் சந்தேக நபர், தப்பிச் செல்வதற்கு தூதரக அதிகாரியொருவர் உதவி வழங்கியள்ளார்.
இந்த தூதரக அதிகாரி தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வாகனத்தின் முன்பகுதி தீப்பற்றி எரிந்த நிலையிலும், வாகனத்தின் பெற்றோல் தாங்கிக்கு சேதம் ஏற்படவில்லை, அரைவாசியளவு எரிபொருள் தாங்கியில் காணப்பட்டது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாஜூடினின் சடலம் வாகனத்தின் சாரதியின் இருக்கையில் இல்லாமல் வாகனத்தின் முன்பகுதியில் மற்றைய ஆசனத்தில் வைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது விபத்து ஏற்பட்டமைக்கான சாட்சியங்கள் கிடைக்கவில்லை.
சம்பவம் தொடர்பில் நாரஹென்பிட்டி பொலிஸார் பொலியான அறிக்கையை வெளியிட்டார்களா என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.
தாஜூடினின் சடலம் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
அவரது எலும்புகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவல்கள் சரியானதா என்பது குறித்தும் விசாரணை செய்யப்படுகின்றது.
கொலைக்கு முன்னதாக ஜனாதிபதிப் பாதுகாப்புப் பிரிவினர் தங்களது உணவகத்தில் கொலை குறித்து கூடிக் கலந்தாலோசித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாஜூடின் தோண்டப்பட்ட சடலத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் 10ம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளது.



 
Top