தனது அரசியல் எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் கே.ஏ. பாயிஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற தேர்தலில் நான் சுயேற்சையாக (ஒட்டகம்) களம் இறங்கினேன். அத்தேர்தலில் 55 சதவீதம் தொடக்கம் 65 சதவீதமான வாக்குகள் புத்தளம் நகரத்திலிருந்து கிடைத்தது. புத்தளம் நகரத்திற்கு வெளியிலுமிருந்து வாக்குகள் கிடைத்திருக்குமாயின் புத்தளம் முஸ்லிம்கள் தமக்கென நிச்சயமாக ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றிருப்பார்கள். எனினும் அது கைகூடவில்லை.
எமது சுயேற்சைக் குழுவுக்கு போதிய நேரம் கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுக்கும் அளவுக்கு எம்மால் வாக்ககளை பெறமுடியவில்லை.
தேர்தலையடுத்து புத்தளம் நகரில் 3 முக்கிய கருத்துக்கள் என்னை நோக்கி முன்வைக்கப்படுகின்றன.
1, நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைய வேண்டும்.
2, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான SLFP யில் இணையவேண்டும்.
3, UNP யில் சேரனும்
இந்த 3 விடயங்கள் குறித்தும் பரிசீலித்து வருகிறேன். எனினும் மிக அதிகமானவர்கள் நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதையே விரும்புகிறார்கள். புத்தளம் நகரில் றிசாத் பதியுதீனின் மேலாதிக்கம் அதிகமாகவுள்ளது. றிசாத் பதியுதீனின் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டுமாயின் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அதனை செய்ய வேண்டுமெனவும் எனது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் மிகவிரைவில் இதுகுறித்து கலந்தாலோசித்து எனது அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யவுள்ளதாகவும் இதன்போது பாயிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.