திகாமடுல்லவில் மு.கா வகுத்த வியூகம் பெற்ற மா பெரும் வெற்றியானது இத் தேர்தலில் மு.கா அடைந்த மாபெரும் தோல்விக்கு முக்காடு போட்டு மறைத்துள்ளது.மீண்டும் மு.கா தனது
முள்ளந்தண்டினை நிமிர்த்தி எழுந்து நிற்க ஐ.தே.கவினால் மு.காவிற்கு தேசியப்
பட்டியல் எனும் மருந்து வழங்கப்பட்டுள்ளது.இவ் மருந்தினை எவ் இடத்தில் கட்டுவதன்
மூலம் தனது முள்ளந்தண்டினை நிமிர்த்த முடியும் என்பதனை கண்டு பிடிப்பதில் மு.கா
இன்று திணறிக் கொண்டிருக்கின்றது.தேசியப் பட்டியலுக்கு பொருத்தமான நபரினை விடுத்து
மு.கா தற்போது இரண்டு தனது நம்பிக்கையான நபரினை
ஐ.தே.கவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.இவர்கள் இருவரும் மிக
விரைவில் இராஜினாமா செய்து அவ் இடத்திற்கு உரிய நபர்கள் நிரப்பப்படுவார்கள் எனவும்
அறிய முடிகிறது.உரிய நபரினை தீர்மானிப்பதில் மு.கா தலைமையின் தடுமாற்றம்,தேசியப்
பட்டியலினை நியமிப்பதில் தேர்தல் ஆணையாளரின் சில இறுக்கமான சட்டங்கள் இவ் மாற்று
நடவடிக்கைக்கான காரணங்கள் எனலாம்.
வன்னி,திருகோணமலையில் மு.கா தான் பல
ஆண்டுகாலமாக தக்க வைத்து வந்த பாராளுமன்ற உறுப்புருமையினை இழந்துள்ளது.கடந்த முறை
களுத்துறைக்கு மு.கா தேசியப்பட்டியல் மூலம் அரசியல் அதிகாரம் வழங்கியும் அவ்
உறுப்பினரினால் இம் முறையும் நிமிர்ந்து நிற்க முடியவில்லை.குருநாகலில் அ.இ.ம.காவினை எதிர்த்து
ஒரு உறுப்பினரின் பெயரினைக் கூட வேட்பு மனுவில் உள்ளடக்க வக்கற்ற கட்சியாக மு.கா
உள்ளது.அனுராதபுரம்,திருகோணமலை ஆகிய இரு இடங்களிலும் ஒரு காலத்தில் முஸ்லிம்களின்
ஏகோபித்த கட்சியாக திகழ்ந்த மு.கா இம் முறை எந்த ஆசனத்தினையும் பெறாத போதும்
நேற்று துளிர் விட்ட அ.இ.ம.கா தங்களது பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்து
மு.காவிற்கு சமனாக கம்பெடுத்து தனது ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளது.கம்பஹாவில் மு.கா
சார்பாக களமிறக்கப்பட்ட ஷாபி அவர்கள் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியினைத்
தழுவியுள்ளார்.பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொழும்பு மாவட்டத்தில் மு.கா சார்பாக
ஒரு வேட்பாளரினைக் கூட நிறுத்த இயலாத ஒரு கட்சியாக மு.கா உள்ளது.மேலுள்ள
பிரதேசங்களில் மு.காவிற்கு ஏற்பட்டுள்ள சவாலினை திறம்பட எதிர்கொண்டு தனது அரசியல் .வாழ்வினைத் மு.கா தொடர வேண்டுமாக
இருந்தால் அவ் இடங்களுக்கு அரசியல் அதிகாரம் ஏதாவது வழங்கப்படல் வேண்டும்.
மு.காவிற்கு இருபத்தொன்பது
தேசியப்பட்டியல் கிடைத்தாலும் போதாது என்ற நிலையில் மு.காவிற்கு இரண்டே இரண்டு
தேசியப்பட்டியல் மாத்திரமே கிடைத்துள்ளது.இவ்விரு தேசியப்பட்டியலினையும் மு.கா
மிகக் கவனமாகவும்,நிதானமாகவும் கையாள வேண்டும்.ஆனால்,கையாளுமா? என்பது தான் இங்கே
உள்ள வினா.
திகாமடுல்லவில் மயிலின் ஆட்டத்தின்
முன்பு தாங்கள் தோல்வி கண்டு விடுவோமோ? என்ற அச்சத்தில்
மு.கா தலைமை தான் செல்லும் இடம்
ஒவ்வொன்றிலும் எத் தீனியினை பொறியில்
வைத்தால் எலி அகப் படுமோ அத் தீனியினை பொறியில் வைத்தது.அவ்வாறு அட்டாளைச்சேனை மக்களினை தன் பக்கம் ஈர்க்க தேசியப் பட்டியல்
எனும் தீனியினையே மு.கா தனது பொறியில் வைத்தது.முஸ்லிம் காங்கிரஸின் மீது கொண்ட தொடர் தேர்ச்சியான
பற்றினாலும்,தேசியப்பட்டியல் வாக்குறுதியில் இருந்து வெளிப்பட்ட அதீத மனத்தினால்
அட்டாளைச்சேனை மக்கள் மு.காவினை முழுமையாக நம்பி அதன் பின் அணி திரண்டார்கள்.
இத் தேர்தலில்
திகாமடுல்லவில் மு.கா மூ வேட்பாளர்கள்
வெற்றியில் மிகப் பாரிய பங்கு அட்டளைச்சேனைக்கு உள்ளது என்பதனை யாரும்
மறுக்க முடியாது.மூ வேட்பாளர்களும் தவிர்ந்து திகாமடுல்லவில் அதீத பாடு பட்டவர்களில் மாகாண சபை உறுப்பினர் நசீர்
முதன்மையானவர்.இவர்களின் இச் செயலுக்கு நன்றி கடனாக தேசியப் பட்டியலினைப் கொடுத்து
கௌரவிப்பது கூட போதாது எனலாம்.எனினும்,மு.கா பல சவால்களினை சந்தித்துள்ள இச்
சந்தர்ப்பத்தில் அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியலினை வழங்குவது பொருத்தமானதா?
என்பதே இங்கே எழும் இன்னுமொரு வினா.
தொடரும்......
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்
ஹக்
சம்மாந்துறை.