தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து சில தகவல்கள் கசிந்துள்ளன.
இத்தகவல்களை திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது
அதன் பிரகாரம் தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் பல அமைச்சுகளின் பெயர்கள் மற்றும் செயற்பாட்டு எல்லைகள் மாற்றப்பட்டுள்ளதுடன், புதிதாக பல அமைச்சுக்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அமைச்சரவையில் முக்கிய அமைச்சுக்களான உயர்கல்வி, சமுர்த்தி, விவசாயம், நீர்ப்பாசனம், நெடுஞ்சாலைகள் மற்றும் பெற்றோலியத்துறை தொடர்பான அமைச்சுக்களை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் ஜனாதிபதி பிடிவாதத்துடன் காணப்படுகின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கியுள்ள அமைச்சுக்களில் பிரதமரின் புதிய எண்ணக்கருவான பாரிய நகர அபவிருத்தித் திட்டமான மெகா பொலிஸ் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்களுடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும் சம்பிக்க ரணவக்கவுக்கு அளிக்கப்படவுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களுக்கு மீண்டும் நிதியமைச்சு அளிக்கப்படவுள்ள அதேவேளை, அவரது அமைச்சின் பொறுப்பிலிருந்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பன அகற்றப்படவுள்ளன.
நிதி அமைச்சின் பொறுப்பிலிருந்து அகற்றப்படும் அரச வங்கிககள் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் என்பன தனியாக ஒரு அமைச்சாக உருவாக்கப்பட்டு அவை கபீர் ஹாசிமின் பொறுப்பில் ஒப்படைக்கப்படவுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சு ருவான் விஜேவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒரு புதிய அமைச்சு அறிமுகப்படுத்தப்பட்டு, மலிக் சமரவிக்கிரம அதன் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். குறித்த அமைச்சின் இராஜாங்க அல்லது பிரதியமைச்சராக சுஜீவ சேனசிங்க நியமிக்கப்படவுள்ளார்.
ஐ.தே.க. வின் கண்டி மாவட்டத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கும் புதிய துறை சார் அமைச்சுப் பதவியொன்று ஒதுக்கப்படவுள்ளது.