GuidePedia

வடமேல் மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவி, புத்தளம் மாவட்டத்துக்கு தரப்பட வேண்டும் என்று கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை உருவாக்கப்பட்ட காலம் தொட்டு சுமார் 28 வருடங்களாக வடமேல் மாகாண முதலமைச்சர் பதவி குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகளுக்கே கிடைத்துள்ளது. அதிக தொகுதிகளைக் கொண்ட மாவட்டம் என்பதும் அதற்கான காரணமாக இருந்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வடமேல் மாகாண முதலமைச்சராக இருந்த தயாசிறி ஜயசேகர, தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார். இதன் காரணமாக மாகாண சபையின் எஞ்சிய இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் பதவி காலியாகவுள்ளது.
அதனை இம்முறை புத்தளம் மாவட்டத்துக்கு வழங்குமாறு அம்மாவட்டத்தின் சிரேஷ்ட அரசியல்வாதி பிரியங்கர ஜயரத்தின ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுர யாப்பா அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து இவ்விவகாரம் குறித்து அனைத்து தரப்பினரதும் ஆலோசனையை பெற்றுக்கொண்ட பின்னர் ஒரு முடிவுக்கு வரவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.



 
Top