ஒரு கட்சித் தலைவராகவும், தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடியவராகவும் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்காக உழைத்த அசாத் சாலி ஐ.தே.க தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாதமை அநீதியானது என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் தயா கமகேவிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
ஜனாதிபதியின் கிழக்கு மாகாண விஜயத்தில் அசாத் சாலியும் அதேவேளை தயா கமகேயும் இணைந்திருந்த நிலையில் அங்கு வைத்து இது தொடர்பில் தயா கமகேவிடம் உரையாடிய ஜனாதிபதி, அசாத் சாலிக்கு முக்கிய இடம் வழங்கப்படும் என்றே தானும் எதிர்பார்த்ததாகவும் அதனால் தற்போது ஏமாற்றமடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் போது தயா கமகே பதிலுரைக்கவில்லையென சுட்டிக்காட்டியுள்ள எமது செய்தியாளர், தேசியப்பட்டியல் முடிவு செய்யப்படும் தருவாயில் அசாத் சாலியின் பெயர் ஏழாவது இடத்தில் இணைக்கப்பட்டிருந்ததை ரவி கருணாநாயக்க மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் உறுதி செய்திருந்தாகவும் அதிகாலையிலேயே பெயர் மாற்றம் இடம்பெற்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஷிமிடம் கருத்து அறிந்து கொள்வதற்கான முயற்சிகள் தொடர்வதும் இதுவரையிலும் ரணில் விக்கிரமசிங்க அதற்கான விளக்கம் எதையும் வழங்கவில்லையென அசாத் சாலி தரப்பு உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
