GuidePedia

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள்  ஆரம்பிக்கப்பட முன்னதாக சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கைகள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று முக்கிய சம்பவங்கள் குறித்த விசாரணைகள் பூர்த்தியாக்கப்பட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம், பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் மரணம் மற்றும் லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் ஜெனீவாவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் பிரயோகிக்கப்படக் கூடிய அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு, குறித்த மூன்று சம்பவங்கள் குறித்த விசாரணை அறிக்கைகளை அவசர அவசரமாக வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பிலான விடயங்களையும் கடந்த அரசாங்கம் உரிய முறையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கு ஆதரவான முறையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற உத்தேசித்துள்ளதாக ஏற்கனவே அமெரிக்கா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

>>>
ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள், பாராளுமன்றத் தேர்தலை அண்டிய காலத்தில் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

அது, அப்போதைய ஆட்சியாளர்களை மடக்குகின்ற முன்னைய ஆட்சியின் போது, நடந்த சம்பவங்களை வாக்காளர்களுக்கு நினைவூட்டுவதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் அரசியல் இலாபம் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சியாகவும் பார்க்கப்பட்டது. 

ஆனால், தற்போதைய நிலையில், இந்த விசாரணைகளின் போக்கு, அதற்கு அப்பாற்பட்ட ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.

அதாவது, இலங்கையின் நீதிப் பொறிமுறையின் மீது நம்பகத்தன்மையை உருவாக்குதல், போரின் போது நடந்த மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பாக நம்பகமான உள்ளூர் விசாரணையை நடத்தும் ஆற்றல் இலங்கைக்கு இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துதல் தான் இந்த விசாரணைகளின் முக்கிய இலக்காக மாறியிருப்பதாகவே தெரிகிறது.



 
Top