களனி ஆற்றில் எரிபொருள் கலப்புக்கு காரணமாக இருந்த கொக்கோ கோலா பெரரேஜஸ் நிறுவனத்தின் சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி இதனை அறிவித்துள்ளார். கடந்த வாரத்தில் குறித்த நிறுவன தொழிற்சாலையில் இருந்து எரிபொருள் களனி ஆற்றில் கலந்தது.
இதனையடுத்து இந்த ஆற்றில் இருந்து குடீநீர் சுத்தரிப்புக்காக அம்பத்தலை நிலையத்துக்கு அனுப்பப்படும் நீரில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது.
அத்துடன் கொழும்பின் பல இடங்களுக்கும் குடிநீர் அவசரமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அதிகார சபையின் ஒழுங்குவிதிகள் உரியமுறையில் கடைப்பிடிக்கப்பட்டால் மீண்டும் குறித்த அனுமதி பத்திரத்தை வழங்க முடியும் என்று கொக்கோ கோலா நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அம்பத்தலை நீர்சுத்திகரிப்பு நிலையத்தின் நீர்அழுத்தும் இயந்திரமும் எரிபொருள் நீர் காரணமாக பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இதற்கு ஏற்படும் செலவை தாம் பொறுப்பேற்றுக்கொள்வதாக கொக்கோ கோலா நிறுவனம் அறிவித்துள்ளது.