இத் தேர்தலில் மு.கா வகுத்த வியூகம் திகாமடுல்லவில் பூரணமாக வெற்றி கண்டுள்ளது.திகாமடுல்லவில்
உள்ள மூன்று தொகுதிக்கும் மு.கா சார்பாக மூன்று உறுப்பினர்கள்
தெரிவாகியுள்ளனர்.தற்போது அமையவுள்ள அமைச்சரவையில் மு.காவிற்கு வழங்கச் சாத்தியமான
ஒரு அமைச்சும் திகாமடுல்லவிற்கு செல்லும் சாத்தியமே அதிகம் உள்ளது.திகாமடுல்லவில்
மு.கா சார்பாக ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர் ( தற்போது மு.காவில் இருந்து
அ.இ.ம.கா பக்கம் சென்றுள்ள மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் தனது பதவியினை மிக
விரைவில் இராஜினாமா செய்வார் அல்லது மாகாண சபை உறுப்புருமையினை இழப்பார் ).சில
வேளை கிழக்கு மாகாண அமைச்சும் திகாமடுல்லவிற்கு
கிடைக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது (எதிர்வரும் செவ்வாய்க் கிழமை மாகாண சபை
உறுப்பினர் தவம் அவர்கள் மாகாண அமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற கதையும் உலா
வருகிறது.மாகாண சபை உறுப்பினர் நஸீரிற்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் அவ்
அமைச்சு மாகாண சபை உறுப்பினர் நஸீரிற்கே கிடைக்கவே அதிக சாத்தியம்
உள்ளது).இப்படியாக திகாமடுல்ல மாவட்டம் மு.காவின் அரசியல் அரதிகாரங்களினால்
நிரம்பி வழிந்தும் ஏனைய மாவட்டங்கள்
காய்ந்து கிடக்கும் இச் சந்தர்ப்பத்தில் மேலும் மேலும் திகாமடுல்லவினை அரசியல்
அதிகாரம் கொண்டு பலப்படுத்துவது பொருத்தமானதல்ல.
இன்று கிழக்கில் பிரதேச வாதம்
உச்சத்தில் நின்று தலைவிரித்தாடுவதால் அட்டாளைச்சேனைக்கு இம் முறை தேசியப்பட்டியல்
வழங்காமல் விட்டால் அதனை ஏற்கும் மனோ நிலையில் அம் மக்கள் இல்லை.தனது வாக்கினைக்
காப்பாற்ற மு.கா தலைவரும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலினை வழங்குவதற்கு
அதிகம் நாட்டம் காட்டுகிறார்.தலைவர் என்ற ரீதியில் இச் சந்தர்ப்பத்திற்கு
பொருத்தமற்ற வாக்குறுதியினை வழங்கி
இருந்தாலும் அதனை நிறைவேற்றுவதே ஏற்புடையது.அல்லது அது வரலாற்றில் அமைச்சர்
ஹக்கீமிற்கு ஒரு கரும் புள்ளியினை ஏற்படுத்திவிடும்.
மாகாண சபை உறுப்பினர்
நஸீரினைப் பொறுத்த மட்டில் பதவி கொடுக்கவில்லை என்பதற்கான கட்சியினை எதிர்த்து
செயற்படக் கூடிய ஒருவரல்ல.எனினும்,தேசியப்
பட்டியல் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படாத போது மு.காவின் எதிரிகள் இதனை வைத்தே
அரசியல் செய்து விடுவார்கள்.எனவே,மு.கா தலைவரின் இவ் தர்ம சங்கடமான நிலையினைப் புரிந்து கொண்டு
அட்டாளைச்சேனை மக்கள்,புத்தி ஜீவிகள்,மத்திய குழு ஆகியன ஒன்றிணைந்து பகிரங்க
விட்டுக் கொடுப்பினை செய்வதே இதற்குள்ள ஒரே ஒரு
தீர்வாக்கும்.எனினும்,எதிர்காலத்தில் அம்பாறைக்கென ஒரு தேசியப்பட்டியல்
மு.காவினால் ஒதுக்கப்படும் சந்தர்ப்பத்தில் தொகுதி வாதங்களுக்கு அப்பால் சென்று
அட்டாளைச்சேனைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையினை முன் வைத்து விட்டுக்
கொடுப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.
தேசியப்பட்டியல் கோரும் அட்டாளைச்சேனை
மக்கள் ஒன்றினை நன்றாக நினைவிற் கொள்ள வேண்டும்.திகாமடுல்லவில் தெரிவாகிய
மு.காவின் மூ வேட்பாளர்களும் உங்களின் அதீத பங்களிப்புக்களினால்
தெரிவானவர்கள்.சம்மாந்துறை மக்கள் மன்சூரிற்கு அளித்த வாக்குகளினை விட
அட்டாளைச்சேனை மக்கள் மன்சூரிற்கு அளித்த வாக்குகள் அதிகம்.சம்மாந்துறை மக்கள்
வெட்கப்பட்டே மன்சூரிடம் ஏதாவது கேட்க வேண்டும்.நீங்கள் நெஞ்சினை நிமிர்த்தி
கேட்கலாம்.அந்த தகுதி உங்களுக்கு உண்டு.மன்சூரும் சம்மாந்துறையினை விட
அட்டாளைச்சேனைக்கு தனது சேவையில் முன்னுரிமை வழங்க கடமைப்பட்டுள்ளார்.நிலைமை
இவ்வாறிருக்க ஏன் அட்டளைச்சேனைக்கென்று உறுப்பினர் கேட்கின்றீர்கள்?
இப் பிரதேச வாத சிந்தனைகள் மக்களிடையே
மேல் எழ எமது அரசியல் வாதிகள் தனது ஊரினை ஒரு கண் கொண்டும் ஏனைய ஊர்களினை
இன்னுமொரு கண் கொண்டு பார்ப்பதும் பிரதான காரணமாக குறிப்பிடலாம்.இவ்வாறான இயல்பு
கொண்டவர்கள் விகிதாசாரத் தேர்தல் முறைக்கு சிறிதேனும் பொருத்தமானவர்கள்
அல்ல.தெரிவாகியுள்ள மூவரும் அனைத்து ஊர்களினையும் ஒரு கண் கொண்டு
பார்ப்பதனூடாக பிரதேச வாத சிந்தனைகளுக்கு
முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.அதற்கான காத்திரமான நடவடிக்கைகள்,திட்டங்களினையும்
திறம்பட வகுத்து செயற்பட வேண்டும்.மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பிரதேச வாத,மத வாத
சிந்தனைகளுக்கு அப்பால் சென்று மு.காவின் தேசியப்பட்டியலினை பேரின மக்களுக்கு
வழங்கியமை இவ் விடத்தில் நினைவூட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் (இவ்
வேளையில் பிரதேச வாத சிந்தனைகளினை ஒழிக்க பல கோண முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டிருந்தது).
பொதுத் தேர்தல்,கிழக்கு மாகாண சபைத்
தேர்தல் ஆகியவற்றில் மு.கா பெறும் ஆசனங்களே மு.காவின் பலத்தினை நேரடியாக பேரின
கட்சிகளுக்கு வெளிக்காட்டி மு.காவின் பேரம் பேசல் சக்திக்கு வித்திடும்.இதில் இம்
முறை பொதுத் தேர்தலில் மு.கா தனது பேரம் பேசல் சக்தியினை இழந்துள்ளது என்றே கூற
வேண்டும்.இன்னும் மு.காவிற்கு கிழக்கு மாகாண சபையே தனது பலத்தினை முன் வைத்து
பேரம் பேசல் சக்தியினை வெளிக்காட்ட எஞ்சியுள்ள ஒன்றாகும்.கிழக்கு மாகாணத்தில்
திகாமடுல்ல,மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களும் மு.காவின் அதீத பலத்தில் உள்ள
போதும் திருகோணமலை மு.காவினை விட்டும் திசை மாறி பயணிக்க ஆரம்பித்துள்ளது.இதன் படி
பார்க்கும் போது மு.கா தற்போது தனது அரசியல் அதிகாரம் கொண்டு பலப்படுத்த வேண்டிய
இடங்களில் திருகோணமலையே முதன்மை இடத்தில்
உள்ளது.
திருகோணமயினை மு.கா மாகாண
அமைச்சு,தேசியப்பட்டியல் எனும் இரு அரசியல் அதிகாரங்களினைப் பயன்படுத்தி பலப்படுத்தக் கூடிய வழி உள்ளது.இதில் மு.கா
குறைந்த பட்சம் ஒரு பதவியினையாவது திருகோணமலைக்கு வழங்க வேண்டும்.இவ்விரு
பதவிகளிலும் அரசியலால் பூரணப்படுத்தப்பட்டுள்ள திகாமடுல்லவிற்கு மு.காவின்
தலைவரின் வாக்குறுதிகளினால் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் மு.காவின்
எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லாத போது ஒரு குறித்த மாகாணத்தினுள்
மட்டுப்படும் மாகாண அமைச்சுப் பதவியினை விட பாராளுமன்ற அதிகாரமே
பொருத்தமானதாகும்.மேலும்,திருகோணமலையில் அ.இ.ம.கா,ஐ.தே.க ஆகியன தங்கள் பிரதிநித்துவத்தினை
உறுதி செய்திருப்பதால் அதற்கு மு.கா ஈடுகொடுத்து நிற்க திருகோணமலைக்கு பாராளுமன்ற
அதிகாரமே மிகவும் பொருத்தமானதாகும்.இவ்வாறு திருகோணமலைக்கு பாராளுமன்ற அதிகாரம்
வழங்கப்பட்டால் மாகாண அமைச்சு போட்டி இன்றி நஸீரிற்கு வழங்கப்படும்.திருகோணமலையினை
பிரதி அமைச்சு கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் பலப்படுத்தி வைத்திருந்த நிலையிலேயே
தற்போது பிரதிநித்துவத்தினை இழந்துள்ளது.எதுவும் வழங்காமல் அனாதையாக விட்டால்..??
சொல்லவா வேண்டும்.பட்டாசுத் சத்தத்திற்கு மத்தியில் கயிற்றை அறுத்து செல்ல
முயற்சிக்கும் மந்தையினை அவிழ்த்து விட்டால் எவ்வளவு வேகமாக ஓடுமோ அதே நிலை தான்
திருகோணமலையில் மு.காவிற்கும் நிகழும்.
எஞ்சியுள்ள தேசியப்பட்டியல்
கிழக்கிற்கு வெளியே எனது பகுதி-01 கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்ட எவ் ஊருக்கு வழங்கினாலும் அதனை
பிழையாக குறிப்பிட முடியாது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல்
ஹக்
சம்மாந்துறை.