(பழுலுல்லாஹ் பர்ஹான்)
கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் சேவையாற்றி வருகின்ற கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் கல்வி அமைச்சில் இணைக்கப்பட்டு அரசாங்க சம்பளம் வழங்குவதற்கான விஷேட நடவடிக்கைகளை மேற்கொள்வதினூடாக நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ.துரைரட்னமினால் கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பாலர் பாடசாலை கல்விப்பணியகத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனையில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு பிரதித்தவிசாளர் திரு.இந்திர குமார் பிரசன்னா தலைமையில் நடைபெற்றபோது தொடர்ந்தும் உரையாற்றுகையில்.....
கிழக்கு மாகாணத்தில் 03 தசாப்த காலமாக யுத்த சூழ்நிலையிலும் அர்ப்பணிப்புடன் இன்று வரை நமது முன்பள்ளி ஆசிரியர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கான விஷேட கொடுப்பணவு ஒன்றினை கடந்த அரசாங்கத்தில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி நேரத்தில் இடை நிறுத்தப்பட்டது.
கல்வி அமைச்சின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களை இணைத்து நிரந்தரமான சம்பளம் வழங்க உயர் நடவடிக்கைகளை முதலமைச்சர், கல்வி அமைச்சர், கிழக்கு மாகாண அமைச்சரவை இணைந்து மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் ஊடாக வருடாந்தம் மத்திய அரசினால் நமது கிழக்கு மாகாண சபைக்கும்;, கல்வி அமைச்சிக்கும் வழங்கப்படும் நிதியினை அதிகரிக்க வாய்ப்புக்கள் ஏற்படும். முன்பள்ளி ஆசிரியர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதன் ஊடாகத்தான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை காணமுடியும்.
இந்த சபையில் உரையாற்றிய உறுப்பினர் திரு.நடராசா கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் முன்பள்ளி தொடர்பாக எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்டார்.
இது கவலைக்குரிய விடயமாகும். கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் கடந்த ஆறரை வருடங்களாக அமைச்சராகப் பணி புரிந்தவன் என்ற அடிப்படையில் இது தொடர்பான யதார்த்தமான நிகழ்வுகளை இச்சபைக்கு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
முன்னாள் முதலமைச்சர் திரு.சந்திரகாந்தனின் முயற்சியினால் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளுக்கான நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கென புதிதாக பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் அமைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளின் விபரங்கள், முன்பள்ளி ஆசிரியர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு முன்பள்ளி பாடசாலைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டதுடன், முன்பள்ளி பாடசாலைகளுக்கான பாடவிதானம் உருவாக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மொழிமூல பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா பயிற்சி நெறியும் 1வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உண்மைகளை மறைத்து சபையில் உரையாற்றுவது குறித்து மிக்க வேதனை அடைகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஒரு விடயத்தை ஆரம்பித்து பல சவால்களுக்கு மத்தியிலும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தினை உருவாக்கிய இத்துறையின் வளரச்சிக்கு திட்டமிட்டு செயல்பட்ட முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் திரு.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர், செயலாற்று முகாமையாளர்கள், அதிகாரிகளுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்; கிழக்கு மாகாண சபையின் அமைச்சிக்களின் அதிகாரங்களை பிரிப்பதிலும், வழங்குவதிலும் தற்போது அனுபவம் பெற்றுள்ளார்.
எனவே முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் உதவியைப் பெற்று அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.தண்டாயுதபானி கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகா கடமை புரிந்து நமது மாகாண கல்வித் துறையை நன்கு உணர்ந்தவர்.
எனவே தற்போதைய நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக நாங்கள் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம். நாங்கள் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்தாலும் கிழக்கு மாகாண சபையை உருவாக்குவதற்கும் அதன் அதிகாரங்களை பெறுவதற்கும் தற்போதைய முதலமைச்சர் பதவியை பெறவும் தியாகத்துடன் கடந்த காலங்களில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.
புதிய முதலமைச்சருக்கு 14 உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினோம். எங்களை நம்ப வைத்து ஏமாற்றியதால் வேறு வழியின்றி எதிர்க்கட்சி ஆசனங்களில் கொள்கைக்காக அமர்ந்து செயல்படுகின்றோம்.
கிழக்கு மாகாண மக்களின் நலனுக்காக சபையில் சமர்ப்பிக்கும் நல்ல திட்டங்களுக்கு எங்களின் ஒத்துழைப்பு என்றும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.