சட்ட விரோதமாக அகதிகளை ஐரோப்பாவுக்கு அழைத்துச்செல்லும் கடத்தல் கும்பல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் அவர்களை கவர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏராளமான மக்கள் தங்கள் நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஐரோப்பியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
அவர்களில் சட்டவிரோதமாக செல்லும் பலர் பல்வேறு காரணங்களால் இறந்துபோகின்றனர். இந்நிலையில் கடத்தல்காரர்கள் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து அகதிகளை சட்டவிரோதமாக ஐரோப்பா அழைத்துச் செல்லுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் பாரிஸ், கிரீஸ் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம் என்று வெளிப்படையாக அவர்கள் விளம்பரம் செய்தாலும் பயணத்தின் போது யாரும் உடமைகளை எடுத்து செல்லக்கூடாது என்றும் முகத்தில் துணி அணியாமல் ஐரோப்பியர்களை போல் செல்லவேண்டும் என்று கட்டளையிடப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணிகளை போல் கையில் கமெரா வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
கடல் மார்க்கமாக ஐரோப்பா செல்லவேண்டும் என்றால் 2,500 பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என்றும், சாலைவழியாக செல்லவேண்டுமென்றால் 5,500 பவுண்ட்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
பத்திரமாக அழைத்து செல்லப்பட்டுவார்கள் என்று விளம்பரம் தரப்பட்டாலும், அகதிகளை ஆபத்தான வகையில் கப்பல்களிலும் லாரிகளில் அடைத்து வைத்து சாலைவழியாகவும் அழைத்து செல்கின்றனர் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் உயிர் இழந்துவிடுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது போல் ஏராளமான விளம்பரங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் உலா வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.