GuidePedia

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சி தரப்பில் முன்வரிசை ஆசனம் வழங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரபால சிரிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தியில் தொடர்ந்தும் காணப்படுவதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சியின் சாதாரண உறுப்பினராக செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் அரசியலில் அவரின் நீண்ட அனுபவம் மற்றும் நாடாளுமன்ற வழக்கப்படி அவருக்கு முன் வரிசை ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும்.
இதன் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அடுத்த ஆசனம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்படவுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அடுத்த ஆசனம் முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தமை அதற்கான முன்னுதாரணமாகும்.
அதே நடைமுறையின் பிரகாரம் தேசிய அரசாங்கத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்துக்கு அடுத்த ஆசனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒதுக்கப்படவுள்ளது. இதற்கான வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top