GuidePedia


விலைவாசி உயர்வு, புதிய மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 2ம் தேதி நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாரிகள், ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ம் தேதி நாடு தழுவிய அளவில் பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்த பொது வேலை நிறுத்தத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன. 

இந்த போராட்டத்தில் சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. மத்திய அரசு பல்வேறு புதிய அதிரடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறது. அதன்படி, காப்பீட்டில் 49 சதவீதம் அன்னிய முதலீடு, புதிய மின்சார சட்டம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 
இதில் ஒரு சில தீர்மானங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், பெரும்பாலானவை நிலுவையில் உள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் டெல்லியில் அனைத்து தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டன. 

இந்த கூட்டத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், அமல்படுத்த இருக்கும் புதிய மின்சார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2ம் தேதி நாடு தழுவிய அளவில் பொதுவேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொழிற்சங்கம், அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, சிஐடியு, தொமுச உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் இருந்து சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அன்றைய தினம் லாரிகள், ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்டவை ஓடாது என அந்தந்த சங்கங்கள் அறிவித்து இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. 

பிஎம்எஸ் திடீர் பின்வாங்கல்

நாடு தழுவிய அளவில் செப்.2ம் தேதி நடைபெற இருக்கும்  போராட்டத்தில் பாஜ ஆதரவு பெற்ற பிஎம்எஸ் தொழிற்சங்கமும் ஏற்கனவே பங்கேற்பதாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்று வேலை நிறுத்தம் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வந்தது. பொதுவேலை நிறுத்தத்திற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், பிஎம்எஸ் திடீரென வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. 

இது குறித்து அந்த தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோடி தலைமையிலான மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ள நிலையில் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் தேவையற்றது. எனவே, இந்த போராட்டத்தில் பிஎம்எஸ் பங்கேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 
Top