GuidePedia

(றிப்கான் கே சமான்)
யாரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென மக்கள் விரும்பினார்களோ அவர்கள் இன்று இந்த நல்லாட்சி என்ற அரசின் அமைச்சர் கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள். தண்ணீருக்காக கால்வாய் வெட்டியவன் நான் . ஆனால் அதில் நீர் குடிப்பதோ வேரெருவர் என ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னி மாவட்ட பிரதான அமைப்பாளருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் நேற்று பாராளுமன்றத்தில் முழங்கினார்.

திரைசேரி உண்டியல் மூலமாக கடன் பெறுதல் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றும் போது நல்லாட்சி அரசொன்றை உருவாக்க வேண்டுமென்பதற்காக அப்போதைய அரசுடன் இருந்த கட்சியிலிருந்து வெளியேறி ஐ.தே.க வுக்குள் நுழைந்த முதல் மஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் நான். கட்சி மாறிய போது எனது வாகனம் தாக்கப்பட்டது, எனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப் பட்டது. இத்தனைக்கும் மத்தியில் என் உயிரைப் பணயம் வைத்தே நான் இந்த நல்லாட்சியை நோக்கிய பயணத்தில் இணைந்தேன்.

நல்லாட்சி அரசு உருவாக்கப் பட்ட நாளிலிருந்து இன்றுவரை 5 தடவைகள் அமைச்சர்கள் மாற்றப் பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ளனர். நாம் காலையில் பாராளுமன்றம் வந்தால் சங்கீதக் கதிரைப் போட்டி போன்று எமது கதிரைகளைத் தேடி ஓடவேண்டியுள்ளது. இதற்காகவா நள்ளாட்சி ஏற்படுத்தப் பட்டது?

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் காட்டிக் கொடுத்தவர்கள், மக்களால் வெறுக்கப் பட்டவர்கள் எல்லாம் இன்று நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் கதிரைகளில் உள்ளார்கள். எமது மக்கள் யாரைத் தோற்கடிக்க வேண்டுமென விரும்பினார்களோ,  யாரை அரசியலிலிருந்து விரட்டியடிக்க வேண்டுமென நினைத்தார்களோ அவர்கள் இன்று அமைச்சர்களாக கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

தண்ணீர் தேவைக்காக கால்வாய் வெட்டியவன் நான். ஆனால் அந்த கால்வாயை வெட்ட எதிர்தவர்கள் இன்று வெட்கமில்லாமல் அதிலிருந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே எந்த அளவு விரைவாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியுமோ அந்தளவு விரைவாகக் கலைத்து விடும்படியும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோருகின்றேன் என்றார்.



 
Top