உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது, எதிர்பாராத வகையில் சக வீரருடன் பலமாக மோதி படுகாயம் அடைந்த இளம் வீரர் அங்கித் கேஷ்ரி (20 வயது) பரிதாபமாக இறந்தார். சால்ட் லேக் மைதானத்தில் நடந்த பெங்கால் கிரிக்கெட் சங்க சீனியர் நாக் அவுட் ஒருநாள் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் - பவானிபூர் அணிகள் கடந்த 17ம் தேதி மோதின. இந்த போட்டியில் உயரே பறந்து கீழிறங்கிய பந்தை பிடிப்பதற்காக முயற்சித்தபோது சக வீரர் சவுரவ் மொண்டாலுடன் பலமாக மோதிய கேஷ்ரி களத்திலேயே மயங்கி விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், 19ம் தேதி இரவு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். கூச் பேகர் கோப்பை போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான பெங்கால் அணியின் கேப்டனாக இருந்துள்ள கேஷ்ரி, 2014 யு-19 இளைஞர் உலக கோப்பை போட்டிக்கான 30 வீரர்கள் அடங்கிய உத்தேச இந்திய அணியில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு சச்சின் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
