GuidePedia

தமிழ்நாடு பெண் வக்கீல்கள் கூட்டமைப்பின் மாநில மாநாடு மதுரையில் நடந்தது. சங்கத்தலைவர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். செயலாளர் நிஷா பானு வரவேற்றார். மாநாட்டை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:–
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகிறார்கள். குறிப்பாக சட்டத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகமாகி வருகிறது. டெல்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் 73 சதவீதம் பெண்கள் நீதிபதியாக உள்ளனர்.
இதேபோல் பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களில் 40 சதவீத பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர். தமிழகத்தில் இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு உயர்ந்து வருகிறது.
பெண்களை பொறுத்த மட்டில் இடஒதுக்கீடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு சரிசமமான வாய்ப்பு அளிக்க வேண்டும். சட்டத்துறை மட்டுமல்லாது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தரேஷ், செல்வம், மதுரை ஐகோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் ஐசக் மோகன்லால், சங்க செயலாளர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



 
Top