GuidePedia

கொழும்பில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக வெகுசிறப்பாக இயங்கி வருகின்ற ஆன்மீக நிலையம் என்கிற தனித்துவ அடையாளம் கொண்டது ஆனந்தசாகரம் ஆச்சிரமம்.
ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு அடியவர்களுக்கு தினமும் இங்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது இதன் சிறப்பு அம்சம் ஆகும். தொடக்கத்தில் மூன்று வேளையும் இங்கு அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு தற்போது மதிய நேர அன்னதானம் தவறாமல் வழங்கப்பட்டு வருகின்றது. 
இந்தியாவில் கேரளாவில் தோன்றிய அவதார புருஷர் இராமதாஸரை முன்னிலைப்படுத்தி இங்கு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாலை 10. 30 மணிக்கு தினமும் கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பம் ஆகி மதியம் 12.30 மணிக்கு பிரார்த்தனை நிறைவு பெறும். தொடர்ந்து அன்னதானம் இடம்பெறும். சிறப்பு பிரார்த்தனைகளுக்காக இந்தியாவில் இருந்து பேராளர்கள் அடிக்கடி வருகை தருவதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாச்சிரமத்தை தரிசித்து வழிபட்டு, அன்னம் புசித்த பலரும் நோய்கள் குணம் அடைய பெற்று உள்ளார்கள்.
மகாபாரதக் கதையில் கர்ணன் என்கிற உன்னத பாத்திரம் உள்ளது. கொடையில் கர்ணன் என்று சொல்லி சிறப்புச் செய்வார்கள். தர்மம் தலை காக்கும் என்பது பழமொழி. ஆனால் கர்ணன் செய்த தர்மம் ஏன் அவனை காப்பாற்றவில்லை? ஏனென்றால் அவன் அன்னதானம் செய்து இருக்கவில்லை என்று அறிஞர்கள் கூறுவார்கள். ஆனால் கர்ணன் செய்து இராத இத்தர்மம் அருளாளரான தமிழ் பெருமகன் ஒருவரின் அர்ப்பணிப்பு காரணமாகவே ஆனந்தசாகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த அருளாளரின் பெயர் வி. பி. பரமலிங்கம். உழைப்பால் உயர்ந்த உத்தமர். கொடுப்பார்க்கு குறைவு இல்லை என்கிற தாரக மந்திரத்தை வாழ்வின் இலட்சியமாக கொண்டு வாழ்வாங்கு வாழ்பவர். யாழ். மாநகர சபை ஆணையாளராக கடமையாற்றிய பாலசிங்கத்தின் சகோதரர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல இடங்களிலும் தர்ம நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.
ஆனால் கடந்த சில வருடங்களாக ஆனந்தசாகரம் ஆச்சிரமத்தில் சில குறைகளை அவதானிக்க முடிகின்றது. இக்குறைகள் திருத்தப்பட வேண்டும். அருளாளர் பரமலிங்கம் உத்தியோகத்தின் நிமித்தம் பெரும்பாலும் டுபாயில் வாழ்பவர். இதனால் ஆச்சிரம நிர்வாகத்தை மைத்துனரான ரமணன் என்பவரிடம் கையளித்து உள்ளார். ரமணனின் நடவடிக்கைகளே குறைகளுக்கு காரணம் என்று பல தரப்பினராலும் கண்டு கொள்ளப்பட்டு உள்ளது.
ஆச்சிரமத்தில் மூலை முடுக்கு எங்கும் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு அடியவர்கள், வேலையாட்கள், விருந்தினர்கள் போன்றோர் கண்காணிக்கப்படுகின்றனர். அலரி மாளிகையில்கூட இவ்வளவுக்கு கண்காணிப்புக்கள் இல்லை. வேலையாட்களுக்கு மாத்திரம் அன்றி அடியவர்களுக்கும் இவ்வேற்பாடு அவசியம் அற்ற சிரமங்களை கொடுப்பதாகவே உள்ளது.
இதே போல அடியவர்களுடன் உரையாடுகின்றமையை இயலுமான வரை தவிர்க்க வேண்டும் என்று வேலையாட்கள் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் வேலையாட்கள் சிடுமூஞ்சிகளாகவே காட்சி கொடுக்கின்றார்கள். இதனால் அடியவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள்.
கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பம் ஆகி நேரம் 11.30 ஆகிய பிற்பாடு ஆச்சிரம கதவு மேலிட உத்தரவுக்கு அமைய மூடப்படுகின்றது. இதுவும் தேவையற்ற விடயம் மாத்திரம் அல்ல ஆச்சிரமம் குறித்து அடியவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணத்தை தோற்றுவிப்பதாகவும் உள்ளது. சாப்பாட்டுக்காக மாத்திரம் இங்கு வருபவர்கள் கிடையாது என்பது வலிமைப்படுத்தப்பட வேண்டிய விடயம் ஆகும். அடியவர்கள் உள்ளம் கனிந்து வாழ்த்துகின்ற அளவுக்கு அன்னதானத்தில் அன்பு பரிமாறப்பட வேண்டும்.  
அடியவர்களில் அநேகர் வயோதிபர்களும், நோயாளர்களும் ஆவர். இவர்களில் பலருக்கு பாயில் சப்பாணி கொட்டிக் கொண்டு அமர்வது கல்லில் நார் உரிப்பது போன்று கடினமான காரியம் ஆகும். முன்பு பிரார்த்தனை மண்டபத்தில் ஆசனங்கள் இவர்களின் வசதி கருதி போடப்பட்டு இருந்தன. தற்போது இவை திடீரென்று அகற்றப்பட்டு விட்டன. இதனால் அடியவர்கள் முணுமுணுக்கின்றார்கள்.
இங்கு வேலையாட்களாக கடமை ஆற்றுபவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள் ஆவர். ஆச்சிரம நெறி முறைகளை இயலுமான வரை பின்பற்றி, பல ஆசாபாசங்களை விட்டுக் கொடுத்து தினமும் சேவை செய்கின்றார்கள். இவர்களுக்கு வழங்கப்படுகின்ற 12000 ரூபாய் சம்பளம் உண்மையில் போதுமானது அல்ல. 
கூட்டுப் பிரார்த்தனையில் அடியவர்கள் எவரும் ஏக போக உரிமை கொண்டாட அனுமதிக்கப்படக் கூடாது. ஆனால் பஜனை பாட விரும்புகின்ற அடியவர்கள் பலரும் மௌனிகளாக்கப்பட்டு உள்ளார்கள். இந்நிலை அடியவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
அருளாளர் பரமலிங்கம் ஆச்சிரமத்துக்கு மிக அரிதாக வருகை தருவார். ஆனால் இவருடன் அடியவர்களும் சரி, வேலையாட்களும் சரி அதிகம் பேசக் கூடாது என்று ரமணன் விரும்புகின்றார். இதனால் ஆச்சிரமத்தின் குறைகள் குறித்து அருளாளர் பரலிங்கத்துக்கு உண்மையில் தெரியாது. இக்குறைகள் திருத்தப்படாமல் இருக்கின்ற காரணத்தாலேயே அடிக்கடி வேலையாட்கள் விட்டு விலகிச் செல்கின்றனர் என்பதோடு அடியவர்களின் எண்ணிக்கை முன்னைய காலத்தை காட்டிலும் இறங்குவரிசை ஆகிக் கொண்டே செல்கின்றது.
- அறிவாளன் -



 
Top