20 தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? என்று ஆந்திர அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
சுட்டுக்கொலை
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்ட வந்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி கூலித்தொழிலாளிகள் 20 பேரை ஆந்திர சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த 7-ந்தேதி சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. 20 பேரின் உடல்களும் ஆந்திராவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவரான சசிகுமாரின் மனைவி முனியம்மாள், சித்தூர் மாவட்டம் சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘இது என்கவுன்டர் மரணம் அல்ல. நன்கு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலை’ என்று அவர் கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து ஐதராபாத் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் சசிகுமார், பெருமாள், முருகன், முனுசாமி, மகேந்திரன், மூர்த்தி ஆகிய 6 பேரின் உடல்கள் மறு பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது.
அரசுக்கு கண்டனம்
மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சி.பி.ஐ. விசாரணை கோரி ஆந்திர ஐகோர்ட்டில் சிவில் உரிமை கழகம் வழக்கு தொடர்ந்தது. மேலும் முனியம்மாளும் ஐகோர்ட்டில் முறையிட்டார்.
நேற்று இந்த மனு தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென்குப்தா மற்றும் நீதிபதி பி.வி.சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஆந்திர அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கைது செய்யாதது ஏன்?
20 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் இதுவரை போலீசார் உள்பட யாரிடமும் விசாரணை நடத்தாதது ஏன்? யாரையும் ஏன் கைது செய்யவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், வருகிற 28-ந்தேதிக்குள் போலீஸ் விசாரணை தொடர்பான டைரியை கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அப்போது கூடுதல் அரசு வக்கீல் டி.ஸ்ரீனிவாஸ், ‘துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக ஆந்திர மாநில அரசு தனியாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே, சி.பி.ஐ. விசாரணை தேவை இல்லை’ என்று தெரிவித்தார்.
உத்தரவிட இயலாது
மனுதாரர் தரப்பில் ஆஜரான வி.ரகுநாதன், ‘7-ந்தேதி நடந்த சம்பவத்திற்கு 14-ந்தேதிதான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதுவும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் முன்பின் தெரியாத அதிரடிப்படை போலீசார் என்று குறிப்பிட்டு உள்ளனர்’ என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவித்து கூறியதாவது:-
உங்களது குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. வழக்கு பதியும்போது முன்பின் தெரியாதவர்கள் என்று பதிவு செய்வது வழக்கம்தான். துப்பாக்கியால் சுட்டவர்கள் பற்றிய பெயர்கள் உங்களுக்கு தெரிந்தால் அதனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தலாம்.
சி.பி.ஐ. விசாரணை கோரும் உங்களுடைய வாதத்துக்கு வலுச் சேர்க்கும் விதமாக இதுவரை ஆதாரங்கள் எதையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை. எனவே இப்போதைய நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட இயலாது.
இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நேர்மையான விசாரணை
மேலும் நீதிபதிகள், ‘‘கேள்விகளுக்குரிய பதில்களை வாய்மொழியாக தெரிவிப்பதும், சந்தேகத்தின் அடிப்படையிலான விசாரணையும் கூடாது. நேர்மையான, சுதந்திரமான, உண்மையான விசாரணை நடைபெற வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையில் சாதாரண விசாரணை அதிகாரி கூட வியக்கத்தக்க அளவில் செயல்பட முடியும். எனவே விசாரணை அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து நடத்தலாம். விசாரணை எப்படி நடக்கிறது? என்பதை நாங்கள் கவனிப்போம் என்றும் குறிப்பிட்டனர்.
