வெளிநாடுகளில் உள்ள இலங்கை புத்திஜீவிகளை மீண்டும் நாட்டிற்க வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பவதற்கு தமது நிபுணத்துவ அறிவைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
08வது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமானபோது விஷேட உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
எமது நாட்டு வரலாற்றில் சமாதானமாக இடம்பெற்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்பட்டு உங்கள் முன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது அரசியல் கட்சி தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் ஐக்கியம் பாதுகாக்கப்படும் எனவும் முப்படைகளின் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பில் அனைவரும் தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை பாராளுமன்றில் ஒரு பிரதான கட்சி 32 வருடங்களாகவும் மற்றொரு பிரதாண கட்சி 31 வருடங்களாகவும் ஆட்சி செய்து வந்த நிலையில், இன்று கூடியுள்ள புதிய பாராளுமன்றம் இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டுக்குப் பொறுத்தமான தேர்தல் முறையை கொண்டுவரவேண்டியது பாராளுமன்றத்தின் பொறுப்பாகும். ஒவ்வொரு அரசாங்கத்துக்கு அரசாங்கம், ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாற்றம் கொண்டுவருவது போலல்லாது மாற்றமில்லாத தேசிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நான் பாடுபடுவேன்.
யுத்த காலத்தில் தேசிய அரசாங்கத்தின் தேவை காணப்பட்ட போதும், அளும் கட்சி எதிர்க்கட்சி அரசியலே முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் ஜனவரி 08ல் தான் பதவியேற்ற பின் சமரச தேசிய அரசாங்கம் உருவாவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதுவரை இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணையும் விதமான அரசியல் யாப்பு ஒன்றறை உருவாக்க முடியாது போனதாக தெரிவித்த ஜனாதிபதி புதிய ஆட்சியில் விருப்பு வாக்கு முறை இல்லாத தேர்தல் திருத்த சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அதற்கான அடிப்படைத் தேவை பூர்த்தி் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நாட்டில் இன ஒற்றுமைக்கு எனது அரசாங்கத்தினூடாக தலைமைத்துவம் வழங்க நான் தயாராக இருக்கிறேன்.
இலஞ்சம், ஊழலை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். அதற்காக இலஞ்சம், ஊழல், அரச உடைமைகளை தவறாக பயன்படுத்தியோர் மீது தராதரம் பாராது தண்டனை பெற்றுக்கொடுக்க நான் பின்நிற்க மாட்டேன்.
2020 ஆம் ஆண்டுகளில் புதிய உலகத்துக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் உயர்வான மாணவ சமுதாயத்தை உருவாக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் இரு பிரதான கட்சிகள் ஆட்சி செய்து வந்துள்ளன. ஒரு கட்சி 35 வருடங்களும் மற்றுமொரு கட்சி 32 வருடங்களும் ஆட்சி செய்திருக்கின்றன.
எமது நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது எமது பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் வளர்ச்சியடைந்தன. இன்று அந்நாடுகள் முன்னோக்கிச் சென்றுள்ளன.
அதற்கு நிகரான வளர்ச்சியை நாம் அடைய வேண்டும் என்பதற்காகவே தேசிய அரசாங்கத்தை உருவாக்க முயற்சி செய்து வந்தேன்.
எமது அரசாங்கம் தேசிய அரசாங்கமாக ஒற்றுமையுடன் செயற்பட்டு நாட்டை அபிவிருத்தியுடன் கூடிய வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும். அந்த நோக்கத்தை அடைய உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் போன்றவை ஒன்றிணைந்து இதனை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.