(லக்ஷ்மி பரசுராமன்)
கொலை செய்யப்பட்ட மொஹமட் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறும் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.
இச்சந்திப்பு நேற்று முற்பகல் நடைபெற்றது. தாஜுதீனின் குடும்பத்தார் ஜனாதிபதியை சந்திக்க தமக்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கமையவே அவர் இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். தாஜுதீனின் தாய், தந்தை, மூத்த சகோதரி மற்றும் இளைய சகோதரர் ஆகியோரே நேற்றைய தினம் ஜனாதிபதியினை சந்தித்திருந்தனர்.
இதன்போது தாஜுதீனை கொலைசெய்துள்ளதன் மூலம் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டிய அவர்கள் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதனால் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தினை ஜனாதிபதி பெற்றுத்தர வேண்டுமென்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
தாஜுதீனின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென உத்தரவாதமளித்த ஜனாதிபதி இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளில் தானோ அல்லது வேறு எந்த சக்திகளோ தலையிடாத வகையில் அனைத்து செயற்பாடுகளும் நீதிக்கு கட்டுப்பட்டு முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி அவர்களுக்கு வாக்குறுதியளித்தார்.
தாஜுதீன் பிரபல ரகர் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கிருலப்பனையில் வைத்து உயிரிழந்தார். இவர் பயணம் செய்த கார் அதிக வேகத்தால் சுவரொன்றுடன் மோதியதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது.
எனினும் இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுந்ததனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு சி. ஐ. டி. யினருக்கு பணிப்புரை விடுத்தார். இரண்டு வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த வாரம் தாஜுதீனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் சி. ஐ. டி.யினர் தாஜுதீனின் மரணம் கொலையென உறுதி செய்துள்ளனர்.