வஸீம் தாஜுதீனை கொலை செய்யும் போது அவரை வதை செய்யும் சத்தத்தை அவரது காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்து கொடூரமான முறையில் கொலை செய்திருப்பது தமக்கு தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
வஸீம் தாஜுதீனின் கொலை தொடர்பில் கதைக்கும் போது ராஜபக்ஷ குடும்பமும் அவரது அடிவருடிகளும் அச்சமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த கொலை தொடர்பில் 3 வருடங்களுக்கு முன்னர் முந்தைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளாது மூடி மறைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இது தேர்தலை இலக்காக வைத்து நடத்தப்படும் விசாரணைகள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும் அவரின் பெற்றோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த நாட்டில் எந்தவொரு சந்தரப்பத்திலும் வாகனம் ஒன்று மோதி முழுமையாக தீப்பிடித்து எவரும் இறந்ததில்லை எனவும் அவ்வாறு வாகனம் தீப்பிடித்து எரியும் நிலை ஏற்பட்டிருந்தால் அதுவரை ரகர் வீரரான வஸீம் வாகனத்தின் ஆசனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தது புதுமை என்றும் பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.