GuidePedia

(எஸ்.அஷ்ரப்கான்)
அபிவிருத்தி அரசியலை மட்டும் காட்டி அரசியல் செய்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினதும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினதும்; தேர்தல் வெற்றி கேள்விக் குறியாகியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கல்முனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் முன்பாக அன்மையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப்பின் கோட்பாடான உரிமைக்கான அரசியலை கைவிட்டு விட்டு அபிவிருத்தியை மட்டும் செய்துகொண்டு தனது அரசியலை செய்தனர். குறிப்பாக இவர்கள் தங்களது ஊர்களை மையப்படுத்தி கூடுதலான அபிவிருத்திகளை மேற்கொண்டனர். இவர்களுக்கு மாவட்டத்தில் வாக்களித்த ஏனைய ஊர்களை கணக்கிலெடுக்காது குறிப்பிடத்தக்க அளவு அபிவிருத்திகளையே ஏனைய ஊர்களில் செய்துள்ளதுடன் எம்சமூகத்தின் பிரச்சினைகளை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் இன்று இவர்களின் வெற்றி இத்தேர்தலில் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம்களின் தேசிய இயக்கமாகும். இவ்வியக்கமானது முஸ்லிம்களின் அபிவிருத்தியிலும், உரிமைசார்ந்த விடயங்களிலும் சமாந்திரமாகவே பயணிக்கின்றது.

எமது கட்சியின் பாராளுமன்ற பிரதிநிதிகள் அவர்களது பிரதேசத்தை மையப்படுத்தி எந்த அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக எங்களுக்கு வாக்களித்த மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அபிவிருத்திகளை செய்துள்ளோம்.
இந்த அதாவுல்லா, ஹிஸ்புல்லாவைப் போன்று நாங்களும் எங்களது ஊர்களை மையப்படுத்தி அபிவிருத்தி செய்ய நினைத்திருந்தால் எங்களது ஊர்கள் அபிவிருத்தி கண்டிருக்கும்.

அமைச்சர் றிசாட் கடந்த மஹிந்த அரசில் 12 வருடங்கள் பலம் வாய்ந்த அமைச்சராக இருத்திருக்கின்றார். அவரின் கட்சி செயலாளராக இப்பிரதேசத்தை சேர்ந்த ஹமீட் இருந்திருக்கின்றார்.

அம்பாறை மாவட்ட மக்கள் அந்நேரத்தில் சுனாமி உள்ளிட்ட பல துயரங்களை எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் மக்கள் காங்கிரஸ் தலைவரோ, செயலாளரோ இம்மக்களைப் பற்றி கவலைப்படவோ இம்மக்களின் அபிவிருத்திற்காக ஒரு செங்கல்லைக் கூடவோ கொண்டுவரவில்லை.

இன்று இவர்கள் அம்பாறை மாவட்டத்தில் எந்தவித அபிவிருத்திகளையும் செய்யாமலும், இந்த மக்களின் கஷ்டங்களில் எந்தப் பங்கும் எடுக்காமலும்,இம்மக்களின் வாக்குகளை மட்டும் குறிவைத்து இத்தேர்தலில் மக்கள் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. இதன்மூலம் இம்மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதுடன், இம்மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் இவர்கள் குழிதோண்டிப் புதைப்பதற்கு முனைந்துள்னர்.

எமது அம்பாறை மாவட்ட மக்களை பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அரசியல் மயப்படுத்தியுள்ளார். எமது மக்களை இலகுவில் ஏமாற்ற முடியாது.

எதிர்வரும் 17 ம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிக்கு எதிரான சக்திகள் அனைத்திற்கும் எம்மக்கள் சாவுமணி அடிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.



 
Top