GuidePedia

பாராளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்கும் இக்கடைசித் தறுவாயில் சிலர் பல கனவுகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த கட்டுரையை உங்களுக்கு வழங்குவது முக்கியமென கருதுகிறேன்.

அட்டாளைச்சேனை என்னும் ஒரு பிரதேசம் கிழக்கு மாகாணத்தில், அம்பாரை மாவட்டத்தில், அமைந்துள்ளது. சகல வசதிகளும் காலடிக்கே கிடைத்துள்ளதால் அப்பிரதேச மக்கள் எந்த சிக்கல், எந்தப் பிரச்சனையுமின்றி சந்தோஷமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அட்டாளைச்சேனையின் தலையெழுத்தில் ஆரம்பம் ஐக்கிய தேசிய கட்சி, அதன் பின்னரான மர்ஹூம் அஷ்ரபின் வருகையைத் தொடர்ந்து அவர் ஸ்தாபித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாலும் சமூகத்தின் அக்கரை கருதியும் இப்பிரதேச மக்கள் ஆளும் கட்சியாகவும், எதிர்ப்பு அரசியலாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஏற்றுக்கொண்டனர்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் மறைவுக்குப் பின்னர் நடந்த தலைமைத்துவப் பிரச்சனை வெட்டுக் குத்து போன்ற பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து கட்சியில் இருந்த முக்கிய பழைய புள்ளிகள் கட்சியினை விட்டுப் பிரிந்து சென்றனர். 

அதில் முக்கிய பங்கினை வகிப்பவர் முன்னாள் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பை. அட்டாளைச்சேனைப் பிரதேச அரசியல் இருப்பினை இதுவரை ஈடுசெய்து மக்களின் குறைகளை ஓரளவேனும் நிவர்த்தி செய்து கொடுத்துக்கொண்டிருப்பவர் என்றால் அது உதுமாலெப்பையைச் சாரும்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மூலமாக அட்டாளைச்சேனைப் பிரதேச சபை கூட அதிகாரத்தில் இருந்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த நடவடிக்கையும் அட்டாளைச்சேனையில் நடக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அங்கு மூன்று முறை தவிசாளர்களாக இருந்தவர்கள் தொங்கு நிலையிலேயே இருந்தனர். 

முதலாவது தவிசாளராக ஒலுவிலைச் சேர்ந்த மர்ஹூம் நூஹுலெப்பை பதவியேற்று மந்த கதியில் ஆட்சியிருந்த நிலையில் அடுத்த சில வருடத்தில் பெரும் சிக்கலுடனான மீண்டும் ஒரு தேர்தலில் மர்ஹூம் மசூர் சின்னலெப்பை அரைவாசிக் காலத்தில் பாலமுனை அன்சிலிடம் சபையை வழங்கி விட்டுச்சென்றார்.

அதனை அடுத்த தேர்தலிலும் அதே நிலை நஸீர் தவிசாள்ர பதவியேற்று ஒரு வருடத்திலேயே பாலமுனை அன்சிலிடம் சபை கையளிக்கப்பட்டது. இதன் விளைவுகள் அதிகாரம் இருந்ததே தவிர சேவைகள் இல்லை என்ற நிஜமான உண்மைக்கு இது ஒரு உதாரணம்.

அவைகள் அனைத்தும் அவ்வாறிருக்க இன்று மீண்டுமொரு பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்னும் சில நாட்களில் அதன் முடிவுகளும் வெளிவரும் தருணத்தில் நாலாபாகமும் வேகமான தேர்தல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

ஆனால் இங்கே பெரும் பிரச்சனை ஒன்று அட்டாளைச்சேனைக்கு நிகழவிருப்பது யாராலும் தடுக்க முடியாத ஒன்றாக மாறிவிடும் என்ற அச்சம் காரணமாக இதனை இன்றே இப்பிரதேச புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், கற்றவர்கள், மற்றவர்ள், கட்சிப்போராளிகள் என்று அனைவரும் கூடி முடிவொன்று எடுக்க வில்லையென்றால் எல்லாமே பூச்சியத்தால் பெருக்க வேண்டிய பெரும் சிக்கல் ஏற்படும்.

அதுதான் தேசியப் பட்டியல் :

தேசியப்பட்டியல் சுமார் முப்பது வருடத்தின் பின்னர் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்படவிருக்கும் ஒரு அதிகாரப்பதவி, அதனை வழங்குவதாகச் சொல்லியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை அதனை யாருக்கு வழங்கப்போகிறது என்னும் பெரும்போராட்டம் இன்று ஊமை ஊர்வலமாகப் போயிக்கொண்டிருக்கிறது.

கட்சியின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ரபுடன் இரண்டறக் கலந்தவர்கள் அன்று தலைவரின் காலத்திலேயே இந்நாருக்கு அட்டாளைச்சேனையில் இக் கட்சி மூலமாகத் தேசியப் பட்டியல் வழங்க வேண்டும் என்று எழுத்து மூலமும் தெரிவிக்கப் பட்ட சிலர் இருக்கும் இவ்வேளை இன்று பலர் தனக்குத்தான் வேண்டும். தனக்கே வேண்டும் என்று முண்டியடித்து போர்க்கொடி தூக்கும் கோர நிலை இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. ஏன் என்றால் கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் இவ்வாறு நடந்த உண்மை வரலாறுகள் பலவுள்ளன.

இம்முறையும் இந்நிலை வேண்டுமா? அந்நிலைக்கு விடலாமா? யார் விட்டுக்கொடுக்கவேண்டும்? யாருக்கு கொடுக்க வேண்டும்? யார் தூக்குவார்? யார் செய்விப்பார்? யாருக்கு தூக்க முடியும்? யாரால் செய்விப்பது? யார் யாருக்கு பிரித்துக் கொடுப்பது? என்ற பல கேள்விகள் இன்று முன்னெளுந்துள்ளது.

ஆனால் ஒரு உண்மையை இந்த இடத்தில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். தேசியப்பட்டியல் ஆசனம் என்பது யாருக்கு கொடுக்க வேண்டும், எப்படிக்கொடுக்க வேண்டும் என்ற சரியான ஒரு நிலைப்பாடு அனைவருக்கும் அறிவிக்கப்பட்டிருத்தல் வேண்டும். 

இது மக்களுக்கான அமானிதம் காக்கும் பெரும் அதிகாரப்பதவி. இதன் மூலம் ஒரு சிலர் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழ ஒரே மாத்திரத்தில் தூக்கிக் கொடுக்க முடியாது. நடந்தவை பல நடந்தேறின நடக்கவிருக்கும் அனைத்தும் சரியாக நடக்கவேண்டும்.

எனவே அட்டாளைச்சேனையின் வரலாற்றில் மர்ஹூம் ஸ்தாபகத்தலைவரின் கனவில் ஒரு தேசியப்பட்டியல் அட்டாளைச்சேனைக்கு என்று கொடுத்தால் அவர் ஸ்தாபகச் செயலாளர் சிரேஷ்டச் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் என்பவர்தான். 

இவரைப்பற்றிச்சொன்னால் இக் கட்சிக்காக பல வருடங்கள் இலவசமாக வழக்குகள் பல பேசி எந்த சலுகையும் இல்லாமல் இதுவரை குரல் கொடுக்கும் ஒருவர், ஸ்தாபகத் தலைவருடன் ஸ்தாபகச் செயலாளராக தானும் தலைவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகியவர், நல்லெண்ணம் கொண்டவர் அனைவருடனும் அன்பாகப் பேசக்கூடியவர், தேவையான இடத்தில் நின்று தேவையை முடித்துக் கொடுத்து விட்டு செல்லக்கூடியவர், திறமைசாலி மூன்று மொழியிலும் பேச்சிலும் எழுத்திலும் வல்லவர், சிறந்த வாதப்பிரதிவாதங்களில் சளைக்காதவர், மக்கள் தொண்டிலும் தன்னை அர்பணித்தவர் எஸ்.எம்.ஏ.கபூர்.

அடுத்திருப்பவர் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யூ.எம்.வாஹிட் ஆசிரியர் இவர் கட்சியின் ஆரம்பகால போராளி கட்சியில் இருந்து பலர் மாரினாலும் தான் கட்சிக்காகவே குரல் கொடுப்பேன் என்று கட்சியுடன் இருந்து கொண்டிருப்பவர், அவ்வப்போது கட்சியால் பல பதவிகளில் இருந்தாலும் இவரும் தேசியப்பட்டியல் பெறும் கனவில் இருப்பவர்கள் பட்டியலில் இருக்கும் அடுத்தவராவர்,

அடுத்திருப்பவர் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பழீல் பி.ஏ. இவர் கட்சியில் மேற்குறிப்பிட்ட இருவருக்கும் பிறகு வந்தவரானாலும் கட்சிக்காக தன் பேச்சாற்றலால் முழங்கிக் கொண்டு குரல் கொடுப்பவர். எனக்குத் தான் தேசியப்பட்டியல் தரவேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்பவரும் இவரே.

அடுத்தவர் புதியவராக கட்சிக்குள் நுளைந்து இரண்டு தேர்தல்களுக்கு முகங்கொடுத்து இரண்டிலும் வெற்றி கண்டு பல இலட்சம் ரூபாய்களைச் செலவு செய்துவிட்டு இன்று மாகாண சபை உறுப்பினராக இருப்பவர் ஏ.எல்.எம். நஸீர் ஆகவே இந்த நான்கு பேரில் யாருக்கு கொடுப்பது, எப்படி கொடுப்பது. 

என்ற பெரும் கேள்விக்குப் பதில்கொடுப்பது மக்களாகவே இருக்கிறார்கள். மக்கள் முன் இவர்கள் நான்கு பேரும் பேசவேண்டும். யாரை முதலில் திருப்திப் படுத்துவது என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டு சரியான முறையில் சரியான தீர்வு கிடைக்கவில்லையென்றால் இம்முறையல்ல எம்முறையும் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் அல்ல விலைப்படியலும் கிடைக்க வாய்ப்பிருக்காது என்பதனை இப்பிரதேச மக்கள் நன்கறிந்து இன்னும் இரண்டு தினங்களுக்குள் இதற்கான தீர்வுகண்டு செயல்படுமாறு அவசரத் தகவலாக அட்டாளைச்சேனை மக்கள் முன் வைக்கின்றேன்.

மக்கள் சார்பாக 
அட்டாளைச்சேனை இளைஞன்.
சமூகத் தொண்டன்.



 
Top