முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பணம் கொடுத்தது உண்மையென, பிரபல போதைப் பொருள் வர்த்தகரான வெலே சுதா நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் இன்று முதல் தினமும் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது.
அதனடிப்படையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற விசாரணையில், துமிந்த சில்வாவுக்கு 2 மில்லியன் பணம் கொடுத்ததாக வெலே சுதா கூறியுள்ளார்.
துமிந்த சில்வாவிடம் தான் வேலைசெய்யும்போது குறித்த தொகையை தேர்தல் பிரசாரத்திற்காக கடனாகக் கொடுத்ததாகவும், அதனைத் திருப்பிக் கேட்கும்போது வீட்டிற்கு வெள்ளை வானும் பொலிஸாரும் வந்ததாகவு அவர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு வெலே சுதா பணம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் துமிந்த சில்வாவிடம் விசாரணை நடத்தியிருந்தனர். எனினும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்காத காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அத்துடன், சில நடிகைகளும் வெலே சுதாவிடம் கடன் பெற்றதாக ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அனைவரும் இக்குற்றச்சாட்டை மறுத்திருந்தனர்.
வெலே சுதாவிடம் தினமும் விசாரணை நடத்தவுள்ள நிலையில், தொடர்ந்தும் பல உண்மைகள் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.