GuidePedia

ஞாயிறு சுடர் ஒளியில் வெளியான நேர்காணல்- நன்றி சுடர் ஒளி...

மிக நீண்ட காலமாக அதிகாரமின்றியே பிரதேச மக்களுக்கு குறிப்பாக படித்த இளைஞர், யுவதிகளுக்கு கல்வி, தொழில்வாய்ப்பு என்று பல்வேறு சேவைகளை செய்து வரும் முஸ்லிம் லிபரல் கட்சியின்  தேசியத் தலைவர் எம். இஸ்மாயீல், தமது கட்சியினுாடாக இம்முறை  பொதுத் தேர்தலில் களமிறங்க எடுக்கப்பட்ட முதல் முயற்சியான கட்சியினை பதிவு செய்யும் செயற்பாடு சில வங்குரோத்து முஸ்லிம் தலைமைகளால் அநியாயமாக தடுக்கப்பட்டது. இந்த கழுத்தறுப்புகளுக்கு  மத்தியில் இத் தேர்தலில் ஆதரவாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுயேட்சைக் குழுவாக  எம். இஸ்மாயீல் அவர்கள் களமிறங்கி இருக்கின்றார். இவர் சுடர் ஒளிக்காக நேர்காணல் ஊடாக தனது  கருத்துக்களை தருகின்றார்.

நேர்காணல்-  (அஷ்ரப்கான்)

கே- உமது அரசியல் பிரவேசம், தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி கூறுங்கள்.

ப- இன்றைய தேர்தல் சூழ்நிலையில் திகாமடுள்ள மாவட்டத் தேர்தலை எடுத்து நோக்குகின்றபொழுது பல அரசியல் கட்சிகளும் பல சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஏனெனில் இன்று தனிப்பட்டவர்களுக்கும் அரசியலிலே ஆர்வம் உண்டாகியிருப்பதைத்தான் இது காட்டுகின்றது.
கிட்டத்தட்ட  25  வருடகாலமாக கட்சி தனிப்பட்டவர்களின் கைகளில்தான் இருந்தது. அப்படி இருந்ததனால்தான் அரசியல் ரீதியாக மக்கள் ஓரங்கட்டப்பட்டார்களே தவிர, கட்சியின் ஊடாக மக்கள் நிரந்தரமான தேவைகள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை. அந்த நிலை வெற்றியளிக்கவுமில்லை. முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் இன்று தோல்வியின் பக்கமே சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் மனங்களிலிருந்து துாரப் போகின்ற நிலையே காணப்படுகின்றது. இப்படியான கட்சிகளுக்குப் பதிலாக பல்வேறு கட்சிகள் உருவாகின்றபோதுதான் உண்மையான ஜனநாயகமும் மக்களின் தெரிவும் சரியான ஒன்றாக அமையும். இதன் அடிப்படையில்தான் நாங்களும் இன்று அரசியலில் குதித்துள்ளோம். எமது கட்சி பதிவு நிலையில் சிறிய தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்களின் அரசியல் தலைவர்கள் என்று தம்மை கூறுகின்றவர்கள் உட்பட்ட பலர் எமது கட்சியை தேர்தலுக்கு முன் பதிவதற்கு முட்டுக்கடடையாக இருந்தார்கள். இது அவர்களின் வங்குரோத்து அரசியல் நிலையையே எடுத்துக்காட்டுகின்றது. அதானால் நாம் இன்று கட்சி சார்பாக ஒரு சுயேட்சைக் குழுவாக தேர்தலில் குதித்துள்ளோம்.

கே- அப்படியென்றால் முஸ்லிம்களின் ஏகபோக கட்சி மு.கா. மக்களுக்கு சேவையாற்ற வில்லை என்கிறீர்களா.

ப- ஆம் உண்மையாக.  மு.கா.வின் இப்போதைய தலைமை பொறுப்பெடுத்ததிலிருந்து இவ்வளவு காலமாக மக்களுக்கு எந்த சேவையை முஸ்லிம் காங்கிரஸ் செய்திருக்கின்றது. என்று கேட்டால் அது பூச்சியமே. சேவை என்பது மக்களுக்கான நிரந்தரத் தேவையை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். அதனால்தான் பிரதான கட்சியை மக்கள் புறம் தள்ளும் நிலை இப்போது உருவாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் கட்சிகளின் பின்னால் சென்று கடைசியில் அக்கட்சிகளையே இன்று வெறுத்து கட்சி உற்பத்தியான இடத்திலிருந்தே ஒதுக்குகின்ற, துரத்தியடிக்கின்ற  நிலைக்கு  இன்று மக்கள் வந்திருக்கின்றார்கள். இந்நிலைக்கு காரணம் கட்சி மோகமாகும். அவர்கள் திறமையானவர்களை தெரிவு செய்திருந்தால் இன்று மக்கள் நடுத்தெருவில் நின்றிருக்க வேண்டியதில்லை. அதனால்தான் திறமையானவர்களை, நல்லவர்களை, திறந்த மனதுடன் மக்களுக்கு உதவி செய்ய வருபவர்களை, சுயநலம் பாராது மக்களுக்கு சேவை செய்து கொண்டிருப்பவர்களை, தலைமைத்துவம் என்ற மாயைக்குள் சிக்கி ஆடிக் கொண்டு இருக்காதவர்களை   தெரிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.  

கே- அப்படியானால் உமது முஸ்லிம் லிபரல் கட்சியின் நோக்கம் என்ன.

ப- மக்கள் கட்சிகளின் பின்னால் செல்வதை விட சிறந்த வேட்பாளர்களின் பின்னால் சென்று மக்கள் உரிமைகளை பெற வேண்டும். அதுவே எமது கட்சியின்  பிரதான நோக்கமாகும்.  எமது சமூகத்தில் உள்ள எதிர்கால சொத்துக்களான இளைஞர்களை வழிநடாத்துகின்ற ஒரு தலைமைத்துவம் இலங்கையிலே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அடிப்படை, ஆணிவேரான அம்பாரை மாவட்டத்தில் இருக்கின்ற கரையோரப் பிரதேசத்தில் இருந்துதான் முஸ்லிம்களை ஆளுகின்ற ஒரு தலைமைத்துவம் உருவாக வேண்டும்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மறைவுக்குப் பின் இன்றுள்ள தலைமைத்துவம் துாரநோக்கற்ற நிலையில் செயற்படுகின்றது. இவர்களுக்கு மக்களால் விரும்பி கொடுக்கப்பட்டதல்ல இந்த கட்சித் தலைமைப் பதவி, மாறாக சில முனாபிக் தனத்தினால் தட்டிப்பறித்ததே கட்சித்தலைமைப் பதவியாகும். மட்டுமல்லாது அம்பாரையை விட்டு அது மிகத் தொலைவில் சென்று விட்டது. முஸ்லிம்களின் இருப்பான அம்பாரை மாவட்டத்தில்தான் முஸ்லிம்களை ஆளுகின்ற தலைமைத்துவம் இருக்க வேண்டும். அதனுாடாக முழு நாட்டு முஸ்லிம்களையும் நிருவகிக்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். ஆனால் கட்சிகள் பல இருப்பதும் நன்மையே அதனுாடாக பல சாதகங்கள் மக்களுக்கு இருக்கின்றது. இதுவே நாம் விரும்புகின்ற அத்துடன் மக்களுக்கு நன்மை பயக்கின்ற விடயமாகும். இதனை மக்களும் இன்று உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அதனால் நிச்சயமாக ஒரு மாற்றம் மிக விரைவில் வரும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கே- நீங்கள் கூறுவது போன்று முஸ்லிம்களுக்கு பல கட்சிகளும் தலைவர்களும் இருக்கின்றபோது  இது சமூகத்திற்கு ஆராக்யமானதா.

ப- ஆரோக்யமானதே ஏனெனில் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் மக்களை எடுத்துக்கொண்டால் மலையக தமிழ் மக்களுக்கு ஒரு தலைமைத்துவம், யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு தலைமைத்துவம் என்று பரவலாக பல கட்சிகளும் தலைமைத்துவங்களும் காணப்படுகின்றது. இதனால் இலகுவாக அவ்வப் பிரதேச மக்களுடைய தேவைகளை அறிந்து சிறப்பாக சேவை செய்வதுடன், பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து தீர்வு கண்டும் வருகிறார்கள். ஆனால் முஸ்லிம்களிடத்தில் ஒரு கட்சி மந்திரம் ஒன்று ஒதினால்போல் ஒரு தலைமைத்துவத்தினாலும் முனாபிக்கு தனமாக செயற்படுபவர்களினாலும் புடை சூழப்பட்டு சின்னா பின்னப்பட்டு இருக்கின்றது. தென் மாகாணத்தில்  முஸ்லிம்களுக்கு ஒரு தலைமைத்துவம் உருவாகி இருந்தால் பேருவளை போன்ற இடங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு அவர்களால் உடன் குரல் கொடுத்து தீர்வு கண்டிருக்க முடியும். அவ்வாறான ஒரு தலைமைத்துவம் இல்லாமையினால்தான் இன்று அப்பிரதேசத்தில் சரியான நியாயம் கிடைக்கவில்லை.  அதுபோன்றுதான் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட முஸ்லிம்களின் திட்டமிட்ட வெளியேற்றத்திற்கு, அட்டூழியங்களுக்கு அங்கு அப்போது ஒரு தலைமை இருந்திருந்தால் அங்கும் அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைத்திருக்கும். இதனுாடாக ஒரு தலைமைத்துவம் பிற பிரதேசங்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்படுகிறது என்பதை உணர முடிகின்றது.

இதனை இல்லாமலாக்கவே எமது கட்சி பல் தேசிய தலைமைத்துவம் முஸ்லிம்களுக்கு முக்கியமானது என்பதை வலியுறுத்தி நிற்கின்றது.  துார இடத்திலிருக்கும் தலைமைத்துவத்தால் இன்று சுனாமி பாதிப்புக்குள்ளான அம்பாரை மக்களுக்கான தேவையினை பூரணமாக செய்து கொடுக்கப்பட வில்லை. இன்றும் தேவையுள்ளவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள். அதுபோல் அம்பாரை கரையோர மக்களுக்கு எதிர்காலத்தில் இடப்பிரச்சினை காரணமாக வீட்டுப் பிரச்சினை வரக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது. இதனை தீர்ப்பதற்காக வெளிநாட்டு உதவியுடன், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளையும் பெற்று நாம் 1500 வீட்டுத்திட்டமொன்றை இப்பிரதேச மக்களுக்காக செய்து கொடுக்க இருக்கின்றோம். அதுபோல படித்த இளைஞர் யுவதிகளுக்கும் தொழில் வழங்கும் முகமாக பாரிய தொழிற்சாலைகளை நிறுவ இருக்கின்றோம். இவ்வாறான சேவைகளை செய்வதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். பொய்வாக்குறுதிகளை செய்பவர்களிடமிருந்து அப்பாற்பட்டு மக்களுக்கு எங்களால் முடியுமானவற்றை செய்வோம்.

எமக்கு தேவையானது எமது மக்களால் பிரதேச நன்மைக்காக ஒரு வாக்கு அதிகாரமே. அதனுாடாக உண்மையான சேவைகளை நாம் செய்ய எத்தனிக்கின்றோம். எமது மக்களின் விடியலுக்காக சிறப்பாக செயற்படும் முஸ்லிம் லிபரல் கட்சியின் சார்பாக நாம் கோரும் அதிகாரத்தை மக்கள் வழங்குமிடத்து எமது சேவைகள் மக்கள் மத்தியில் மிகச் சிறப்பாக செயற்படுத்தப்படும் என்பதுடன் மிக விரைவில் அகில இலங்கை ரீதியாக எமது சேவைகள் தொடரும், கட்சி பணிகள் வியாபிக்கப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கே- இறுதியாக மக்களுக்கு இத்தேர்தல் தொடர்பாக என்ன கூற விரும்புகின்றீர்கள்.

ப- இறுதியாக மக்களிடத்தில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். நலிவடைந்துள்ள முஸ்லிம்களின் அதிகாரம், பொருளாதாரம், மத உரிமைகள், என்பவற்றை அதிகாரத்தோடு பெற்றுக்கொள்ளும் நிலையுடன், சவால்களுக்கு முகம் கொடுக்கும் சிறந்த அரசியல்வாதிகளை பாராளுமன்றுக்கு அனுப்ப வேண்டும்.

இலங்கைத் தாய் நாட்டின் பங்குதாரர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் அவர்களுக்கான தேவைகளை இனம்கண்டு சிறப்பாக செயலாற்றுவதற்கு நாம் திடமாக முன்வந்துள்ளோம். எதிர்காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது தமிழ் பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராடும் ஒரு திறமை வாய்ந்த, சுயநலமற்ற கட்சியாக நாம் இக்கட்சியை மக்கள் பலத்துடன் கட்டியெழுப்புவோம். அதற்காக மக்கள் ஆதரவு எமக்கு வேண்டும்.   



 
Top