GuidePedia

இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் ஆக்ஸ்ட் 17ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதற்கான பிரச்சாரங்கள் 14ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைகின்றன.

இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் புதிய அரசியல் சாசனம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின. அந்தப் புதிய அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றம், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் விகிதாச்சார அடிப்படையில் நடைபெற ஆரம்பித்தன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு இடங்கள் கிடைக்கும். அந்தத் தேர்வும் இரண்டுகட்டமாக நடைபெறும். தேர்தல் நாளன்று வாக்காளர்க்கு ஒரு வாக்குச் சீட்டு வழங்கப்படும். அதில் போட்டியிடும் பிரதான கட்சிகளும் அவர்களின் சின்னங்களும் இருக்கும். அதற்குக் கீழே வேட்பாளர்களுக்குரிய இலக்கங்களும் காணப்படும்.

முதலாவதாக, வாக்காளர்கள் தாங்கள் விரும்பும் கட்சியின் சின்னத்துக்கு அருகிலுள்ள கட்டத்தில் குறியிட்டு தமது வாக்கை பதிவு செய்வார்கள். பின்னர் அதே வாக்குச் சீட்டின் கீழ் பகுதியில், தாம் ஆதரித்த கட்சியின் சார்பில் குறிப்பிட்ட அந்தத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஓருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என தாம் விரும்பும் வேட்பாளர்களுக்குரிய இலங்கங்கள் உள்ள கட்டத்தில் ‘x' எனக் குறித்து தமது விருப்ப வாக்கை வழங்குவார்கள்.  எனினும் வாக்களார்கள் தனது விருப்ப வாக்கை வழங்காமலும் விடலாம்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிவாரியாக இல்லாமல், விகிதாச்சார அடிப்படையில் நடைபெற்றாலும்) நாடு முழுவதும், பல தேர்தல் மாவட்டங்களாப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை தேர்தல் ஆணையத்தால் முடிவு செய்யப்படும். அந்த வகையில் இலங்கை முழுமையும் 22 தேர்தல் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் உபரி(போனஸ்) இடங்களும் வழங்கப்படும். மொத்தமாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து 160 உறுப்பினர்களும், 36 உறுப்பினர்கள் போனஸ் இடங்களில் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி தேர்வு செய்யப்பட்ட 196 பேர் தவிர மீதமுள்ள 29 பேர் தேசியப் பட்டியலின் அடிப்படையில் நியமனம் பெறுவார்கள். தேர்தலில் நாடுதழுவிய அளவில் கட்சிகள் பெறும் வாக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவகையில் விகிதாச்சார அடிப்படையில் தேசியப் பட்டியல் இடங்கள் வழங்கப்படும்.

ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிடும் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும், அந்த மாவட்டத்திலிருந்து தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கு குறைவாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மூன்று உறுப்பினர்களை கூடுதலாக போட்டியிட நியமிக்க வேண்டும்.

அதேவேளை தேர்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்துக்கும் இருபதுக்கும் இடைப்பட்டு இருக்குமாயின், தேர்வாகவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக ஆறு பேரை போட்டியிட நியமிக்க வேண்டும். ஒட்டுமொத்த இலங்கையிலும் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக 19 உறுப்பினர்களும், (தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் செறிவாக வாழும்) திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகக் குறைந்த அளவில் 4 உறுப்பினர்களும் தேர்தேடுக்கப்படவுள்ளனர்.

வாக்கு எண்ணப்படும் முறை
தேர்தல் முடிந்தவுடன் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும். முதலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் எண்ணப்படும்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு அந்தத் தேர்தல் மாவட்டத்துக்கான போனஸ் இடம் அளிக்கப்படும். பின்னர் பதிவான வாக்குகளில் ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்கள் போட்டியிலிருந்து விலக்கப்படும். அவர்கள் சார்பில் யாரும் நாடாளுமன்றம் செல்ல முடியாது.

இதையடுத்து ஐந்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற கட்சிகள்/சுயேச்சைக் குழுக்களின் கூட்டு வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வாக்குகளில் இருந்து கழிக்கப்படும். மீதமிருக்கும் வாக்குகளே உறுப்பினர்களைத் தேர்தெடுக்க செல்லுபடியான வாக்குகளாகக் கருதப்படும். 

இந்தக் கணக்கீட்டுக்கு பிறகு அந்த மாவட்டத்துக்குண்டான உறுப்பினர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டு, அந்த எண்ணிக்கையால் செல்லுபடியான வாக்குகள் வகுக்கப்படும். இதில் கிடைக்கும் எண்ணிக்கையே ஒரு உறுப்பினரைத் தேர்வு செய்ய தேவையான வாக்காகக் கருதப்படும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில், கட்சிகள் பெற்ற வாக்குகளை வைத்து அவர்களுக்கு எவ்வளவு இடங்கள் என்பது முடிவாகிறது.

விருப்ப வாக்குகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு
ஒவ்வொரு உறுப்பினரும் தேர்வாக அந்தந்த தேர்தல் மாவட்டத்தில் எவ்வளவு வாக்குகள் தேவையோ, அது முடிவான பிறகு, அம்மாவட்டத்தில் போட்டியிட்ட ஒவ்வொரு கட்சி/சுயேச்சைக் குழு பெற்றுள்ள வாக்குகளால் அது வகுக்கப்படும். அதன் அடிப்படையில் கட்சிகளுக்கு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டுக் கொண்டே வரப்படும். பின்னர் ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய தேவைப்படும் வாக்குகளைப் பெறாத கட்சி விலக்கப்படும்.

இதையடுத்து களத்தில் இருக்கும் கட்சிகளிடம் மீதமுள்ள வாக்குகளின் அடிப்படையில் கூடுதல் வாக்குகளை பெற்றவர்களுக்கு, இன்னும் அந்தத் தேர்தல் மாவட்டத்தில் இடங்கள் எஞ்சியிருக்குமாயின் அது ஒதுக்கீடு செய்யப்படும். இறுதியாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் எந்தக்கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று முடிவான பிறகு, அந்தக் கட்சிகளின் சார்பில் விருப்ப வாக்குகள் யாருக்கு அதிகம் என்று தீர்மானிக்கப்படும். அந்தப் பட்டியலின் அடிப்படையில், அந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் கிடைத்துள்ளனவோ அதற்கேற்ற வகையில் மேலிருந்து கூடுதலாக வாக்குகள் பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாத் தேர்தெடுக்கப்படுவார்கள்.

செல்லாத வாக்குகள்
வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டவுடன் முதலவாதாக தாம் விரும்பும் கட்சி/சுயேச்சைக் குழுவுக்கான வாக்கைச் கட்டாயம் குறியிட்டு செலுத்த வேண்டும். இல்லையெனில் அந்த வாக்கு செல்லாத வாக்காகிவிடும். அதேபோன்று விருப்ப வாக்கு என்று வரும்போது, மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக குறியிட்டு வாக்கைப் பதிவு செய்தால் அந்த வாக்கும் உறுப்பினர் தேர்வுக்கு செல்லாத வாக்கு என அறிவிக்கப்படும். ஆனாலும் அதுகட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு மட்டும் கிடைத்த வாக்காக கருதப்பட்டு எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படும். 



 
Top