(க.கிஷாந்தன்)
நடைபெறவுள்ள பொது தேர்தலில் மலையக மக்களுடைய அபிலாஷகளை மற்றும் உரிமை ரீதியாக மக்களை காப்பாற்றக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும் என ஜக்கிய தேசிய கட்சியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பி.இராஜதுரை தெரிவித்தார்.
அக்கரப்பத்தனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் இங்கு கருத்து தெரிவிக்கையில்….
கடந்த காலங்களில் மலையக தலைமைகள் மக்களுக்காக சலுகையை மாத்திரமே பெற்றுக்கொடுத்திருக்கின்றார் கள். இதற்கு காரணம் மலையக மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்க மலையக தலைமைகள் தவறியுள்ளது.
ஒரு சமூகம் சலுகைகளுக்காக வாழ்வதை விட அவர்கள் உரிமையுடைவர்களாக வாழவைப்பது அரசாங்கத்தினதும் மலையக அரசியல்வாதிகளினதும் கடமையாகும்.
நான் சட்டதரணி என்ற வகையில் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனது பாராளுமன்ற அனுபவத்தில் மலையக மக்களுடைய காணி உரிமை, வீட்டு உரிமை தொடர்பாக நான்கு வருடமாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியதன் காரணமாகவே இன்று மலையகத்தில் வீடு அமைப்பு, காணி உரிமை உறுதிப்பத்திரம் என்பன இடம்பெறுகின்றது.
அத்தோடு ஜக்கிய தேசிய கட்சி மலையக மக்களுடைய தேவைகளை அறிந்த கட்சியாகும். எமது சமூகம் படித்த சமூகத்தை கட்டியெழுப்புவதோடு படித்தவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு வாக்களிக்க வேண்டும்.
இன்று சலுகைகளை விட இம்மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியிலும் சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும்.
இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக அதிகமானவர்கள் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்தாலும் நுவரெலியா மாவட்டத்தை பொருத்தவரையிலும் மக்கள் படித்த நபர்களை தெரிவு செய்வதற்கு தயாராகியுள்ளனர்.
அத்தோடு இளைஞர் சமூகம் கூட படித்தவர்களை தெரிவு செய்வதில் அக்கறை காட்டி வருகின்றார்கள். எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் பட்டதாரிகள் கல்விமான்கள் இருக்கும் பொழுது தான் இம்மக்களுடைய அபிலாஷகளை உரிமை ரீதியாக கொண்டு செல்ல முடியும்.
அத்தோடு நுவரெலியா மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படித்தவர்களின் தொகை அதிகரித்து வருகின்றமை பாராட்டதக்க விடயம்.
இதேவேளை இவர்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமான விடயமாகும்.
அந்தவகையில் தற்போது பிரதமரான ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இது தொடர்பாக நான் கலந்துரையாடியுள்ளேன். அதற்கு அவர் செவிசாய்ததோடு மலையகத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு தொடர்பாக முக்கிய பங்களிப்பு வழங்குவதாக அவர் இனங்கியுள்ளார்.
எனவே இம்முறை தேர்தலில் நிச்சியமாக அதிகபடியான வாக்குகளினால் ஜக்கிய தேசிய கட்சி வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும். இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் என்னையும் மலையக மக்கள் வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
என்னை போன்ற கல்விமான்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு மக்கள் அதிக அக்கறை காட்டி வருகின்றமை குறிப்பிடதக்கது. இம்மக்களின் வாக்குகளை பெற்று சுபபோக வாழ்க்கையை வாழ்கின்றவர்களை விட இந்த மக்களுக்கு சேவை செய்ய கூடிய நபராகவும் நன்றியுள்ளவனாகவும் இருப்பேன்.
அத்தோடு தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள உயர்வு தொடர்பாக மக்களுக்கு தெளிப்படுத்தியதோடு தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி அவர்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி நல்ல தீர்வினை பெற முடியும் என கூறினார்.