GuidePedia


ஜனவரி 9ம் திகதி அதிகாலை தான் வௌியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 


தன் மீது மக்கள் அன்று வைத்திருந்த அன்பு இன்னும் அதேபோன்று இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 


ரிவி தெரணவில் இடம்பெற்ற ´360´ விஷேட அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 


ஜனவரி 9ம் திகதி அதிகாலை பிரதம நீதியரசர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பு பிரதானிகளை அலரி மாளிகைக்கு அழைத்து சதித்திட்டம் தீட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ஊடகவியலாளர் தில்கா சமன்மலியினால் கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அவர்களை அலரி மாளிகைக்கு அழைத்தது உண்மையென்றார். 


புதிய ஜனாதிபதி பதவியேற்கும் வரையில் தான் ஜனாதிபதி என்பதால் நாட்டில் ஏதும் அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் தானே பொறுப்புக் கூற வேண்டும் என்பதுடன், அவ்வாறானதொரு நிலை ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதன்போது கலந்தாலோசிக்கப்பட்டதாக மஹிந்த குறிப்பிட்டார். 


சதித்திட்டம் தீட்டுவதற்கு நீதிபதி தேவையில்லை என்றும் நீதிபதியின் ஆலோசனைக்கமைய சட்டப்படி திட்டம் தீட்டுவது சதித்திட்டம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 


தனது பதவிக்காலம் நிறைவடைய இரண்டு வருடங்கள் எஞ்சியிருந்த நிலையில் தேர்தலுக்கு சென்றமையானது ஜோதிடரின் ஆலோசனைக்கமைய அல்ல என்றும் ஆனாலும் நல்ல நாளில் தேர்தலை நடத்துவதற்கு ஜோதிடரின் ஆலோசனை பெற்றதாகவும் என்றாலும் ஜோதிடர் தனக்கு தந்தது நல்ல நாள் அல்ல. மாறாக மைத்திரிபால சிறிசேனவிற்கே ஜோதிடர் நல்ல நாளை கொடுத்திருந்தார் என்றும் மஹிந்த கூறினார். 


தற்பொழுது ஜோதிடரின் கருத்துக்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று அவர் கூறினார். 


ஜனாதிபதி ஒருவரை ஒருமுறையா, இரண்டு முறையா, அல்லது மூன்று முறையா தெரிவு செய்வதென்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என்பதுடன் அவ்வாறில்லாமல் அமெரிக்கா அல்லது பிரான்ஸ் நாடுகளின் அரசியலமப்பு படி நாங்கள் அதை வரையறுத்து கொள்ள வேண்டியதில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விஷேட உரையின் மூலமாக தான் எந்தவித வருத்தமும் அடையவில்லை என்றும் அது கட்சியின் வாக்குபலத்தை அதிகரிக்குமே தவிர எந்தவிதத்திலும் வீழ்ச்சிக்கு காரணமாகாது என்றும் ராஜபக்ஷ தெரிவித்தார். 


விஷேடமாக ஜனாதிபதி கட்சியின் கீழ்மட்டத்திற்கு தைரியத்தை ஏற்படுத்தி இருந்ததுடன் மறுபக்கத்தில் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பாக குறிப்பிட்டமையானது ஐதேக.வின் வாக்குகளை வீழ்ச்சியடையச் செய்வதற்கு காரணமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 


அத்துடன் கூட்டமைப்பு வெற்றிபெற்றால் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வழங்குவதில்லை என்ற கருத்து தொடர்பில் கேட்டதற்கு, 1970ம் ஆண்டு முதல் மைத்திரிபால சிறிசேனவை தான் அறிந்து வைத்திருப்பதாகவும், பிரதமர் பதவியை தனக்கு வழங்காமல் இருக்கமாட்டார் என்றும் தெரிவித்தார். 


தனது ஆட்சி காலத்தில் சிறு சிறு தவறுகள் இடம்பெற்றதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், உதாரணமாக சஜித் பிரேமதாஸவின் சகோதரி கள்ள நோட்டுக்களுடன் கைது செய்யப்பட்ட வேளை அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்காமல் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு தான் பணித்ததாக மஹிந்த குறிப்பிட்டார். 


இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்த காலத்திலிருந்து அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால் 15 இலட்சம் வேலையில்லாப் பிரச்சினை எழுந்துள்ளதாகவும் அது பாரிய பிரச்சினை என்றும் அவர் தெரிவித்தார். 


கீழ் மட்ட விவசாயிகள் முதல் முகாமையாளர்கள், பொறியிலாளர்கள் உட்பட அனைவரும் தொழில் இன்றி சிரமப்படுவதாகவும் ராஜபக்ஷ தெரிவித்தார். 


லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணமால் போன சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அன்று ஐதேக.வினர் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டியதாகவும் அன்று குற்றஞ்சாட்டியவர்கள் இன்று அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருப்பதனால் மௌனம் காப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.




 
Top