GuidePedia

னிப்பட்ட அபிலாஷைகளை விட்டு அரசியல்வாதிகள் வெளியேறினால்தான் புத்தளத்திற்கு விடிவு. தமக்குரிய எதிர்கால அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவே மக்கள் ஒருவரை தெரிவு செய்கின்றனர்

அவருக்கு வாக்களிக்கின்றனர். அதில் அந்த நபர் மட்டுமல்ல. எந்த அணியுடன் சேர்ந்தால் எமது எதிர்பார்ப்பை, இலக்குகளை அடையலாம் என்ற நிலைப்பாடும் உள்ளடங்கியுள்ளது. இப்படி மக்கள் பல நாட்கள் கனவு கண்டு, கற்பனை வளர்த்து தேர்ந்தெடுக்கும் நபர், அந்த மக்களின் ஆணையை புறக்கணித்துவிட்டு தனது தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக அல்லது அபிப்பிராயத்திற்காக குறிப்பிட்ட அந்தக் கட்சியை விட்டு விலகி மற்றுமொரு அணியில் போய் சேர்ந்து கொள்கின்றார்

இதனால், அந்த நபருக்கு வேண்டுமானால் வரப்பிரசாதங்கள் குவியலாம். ஆனால், குறிப்பிட்ட கட்சி சார்பாக அவரை தேர்ந்தெடுத்த மக்கள் பழிவாங்கப்படுகின்றனர். அரசியல் அநாதைகளாக்கப்படுகின்றனர். அவர்களின் வாக்குகள் செல்லாக் காசுகளாக மாறுகின்றன. இப்படியான அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை இழக்கின்றனர். இறுதியாக அவர்களை நிராகரிக்கின்றனர்

இந்த விடயத்துடன் புத்தளம் அரசியலை கவனித்துப் பாருங்கள். ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக ஹாபியை தெரிவு செய்வதற்காக மக்கள் 34 ஆயிரம் வாக்குகளை வழங்கினார்கள். துரதிஷ்டவசமாக அவர் தெரிவாகவில்லை. பிறகு மு.கா சார்பாக .தே.கட்சியில் போட்டியிட்ட கே..பாயிஸூக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை மக்கள் வழங்கினார்கள்

அதில் அவர் தெரிவாகவில்லை என்றாலும் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியலைப் பயன்படுத்தி கட்சி தாவினார். மு.கா. சார்பாக மாகாண சபைக்கு போட்டியிட்ட யெஹ்யா, நியாஸ் ஆகியோரை மக்கள் தெரிவு செய்தனர். அவர்களும் காலத்திற்கு காலம் தம்மைச் சுற்றியிருந்த சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருந்து வந்தார்கள். இறுதியாக யெஹ்யா கட்சியை விட்டு வெளியேறி ..சு.கூட்டமைப்பில் போட்டியிட்டு 11 ஆயிரம் வாக்குளைப் பெற்றும் தெரிவாகவில்லை

நியாஸ் மு.கா. சார்பாக நான்காயிரத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று தெரிவானாhர். தாஹிர் 16 ஆயிரம் வாக்குகளைப் பெற்றும் மாகாண சபைக்கு தெரிவாகவில்லை. தேசியப் பட்டியலில் அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது

ஆக, இப்போது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ள நியாஸ் மட்டுமே இருக்கிறார். அவர் பெற்றுக் கொண்ட வாக்குகள் நான்காயிரத்திற்கும் குறைவாகும். ஒரு இலட்சத்து 37 ஆயிரம் சிறுபான்மை வாக்குகளைக் கொண்ட புத்தளம் மாவட்டத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவம் வெறும் நான்காயிரத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

ஆரம்பத்தில் 34 ஆயிரம் வாக்குகளை செலுத்திய மக்களுக்கு ஏன் இதே தொகையில் ஒரு பிரதிநித்துவத்தை தக்க வைக்க முடியாமல் போனது? அல்லது அந்த எண்ணிக்கையை மேலும் கூட்டி ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை ஏன் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது?

இதற்கான காரணத்தை அரசியல்வாதிகள் மக்கள் மீது சுமத்துகின்றார்கள். ஆனால், அரசியல் வாதிகளின் உறுதியில்லாத, நிச்சயமில்லாத, கொள்கையில்லாத போக்குகள் காரணமாக அவர்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்திருப்பதால் அவர்களின் வாக்குகள் சிதைந்துள்ளன. ஒருமித்த கொள்கையுடன், மக்களின் நிலைப்பாட்டில் இருந்து யோசிக்கும் அரசியல்வாதிகள் உருவாகினாலே ஒழிய இதற்கு தீர்வு காண முடியாது

மக்கள் எல்லோருக்கும் இருக்கும் அதே அபிலாஷைகள், கனவுகளுடன்தான் இருக்கின்றார்கள். ஆனால், அரசியலில் குதிக்கும் நபர்கள் மீதுதான் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நின்று யோசிப்பதில்லை. அவர்களின் சொந்த அபிப்பிராயங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர். இந்த நிலைமை எப்போது மாறுமோ அப்போதுதான் புத்தளத்திற்கு விடிவு கிடைக்கும்


ஜூனைத் எம் ஹாரிஸ்



 
Top