றகர் வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்சவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இன்று ஓர் அமைதியான சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகின்றது.
கடந்த அரசில், பாரிய தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்ட ஒரு தேர்தல் முறைதான் அரங்கேறியிருந்தது.
கடந்த ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை நாம் முன்நோக்கிக் கொண்டு செல்லவேண்டும்.
போதைப்பொருள் கலாசாரம், ஊழல் ஆட்சி என்பவற்றுக்கு இறுதியாக எதிர்வரும் 17ம் திகதியுடன் விடைகொடுத்து நல்லாட்சியை ஏற்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
இனவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டு மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வரத் துடிக்கின்றார். இவரின் செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் இனி ஒருபோதும் அகப்படப்போவதில்லை.
வசீம் தாஜுடீனின் மரணம் ஒரு கொலையென இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்சவும் அவரின் புதல்வர்களும் கதிகலங்கியுள்ளனர்.
தனது தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசில் வசீம் தாஜுடீனின் மரணம் குறித்த முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என மஹிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
அதற்கு நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. மீண்டும் இந்த நாட்டில் அவரின் ஆட்சி அமையும் என நினைப்பது வெறும் கனவாகவே இருக்கும் என்றார்.