(பிறவ்ஸ் முஹம்மட்)
ஒரு கிராமத்துவாசி அப்பிரதேசத்தின்
தேவையை கருத்திற்கொண்டு கீரைக் கடையொன்றை நடாத்திவந்தார். அங்கு கீரைகளை நியாய விலையில்
விற்றுவந்தார். இதனால் அவர்மீது மக்களுக்கு நல்லபிப்பிராயம் ஏற்பட்டது. அவர் திடீரென
மரணிக்க, இன்னுமொரு ஊரைச் சேர்ந்தவர் அதே கீரைக்கடையை எடுத்து வியாபாரம் செய்துவந்தார்.
எனினும், முன்பிருந்தவர் போன்று அவர் செயற்படவில்லை. மக்களுக்கு திருப்தியான சேவை
கிடைக்கவில்லை. ஏன், சிலருக்கு கீரையே கிடைக்கவில்லை.
என்னதான் இருந்தாலும் மரணித்தவரின்
"முகப்பத்துக்காக" சிலர் அந்தக் கடையுடன் தொடர்புகளை வைத்திருந்தனர். ஆனாலும்,
சிந்திக்கத் தொடங்கிய சிலர் புதிய வியாபாரியை நிராகரிக்கத் தொடங்கினர். அத்துடன்
ஊருக்கு புதியதொரு கீரைக்கடை வந்தால் நல்லமென்ற சிந்தனை அவர்களிடையே தோற்றம்பெற்றது.
ஊர்க்காரரினால் உருவாக்கப்பட்ட
கீரைக்கடையில் வேறுபிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மோசடி செய்துகொண்டிருப்பதை உணர்ந்த
மற்றுமொருவர், அங்கு இன்னுமொரு கீரைக்கடையை ஆரம்பித்தார். இதனைக் கண்ட இரண்டாவது
வியாபாரி புதிதாக வந்துள்ள வியாபாரி மீது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுடன், தனது
கடையை காத்துக்கொள்வதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.
என்னதான் இருந்தாலும் புதிய
கடைக்கு வாடிக்கையாளர்கள் வருவதை தவிர்க்க (தடுக்க) முடியவில்லை. இதனை தாங்கிக்கொள்ள
முடியாத இரண்டாவது வியாபாரி தனது கடையை மூடுவதற்கு, புதிதாக ஒருவர் வந்துள்ளதாக பிரசாரம்
செய்கிறார். அத்துடன் உங்களது ஊர்க்காரர் ஆரம்பித்த கீரைக்கடையை காப்பாற்றுமாறு மக்களிடம்
முறைப்பாடு செய்கிறார்.
பழைய கடையில் திருப்திகரமான
சேவை வழங்கப்படாமல் கல்லாப்பெட்டி நிரப்பும் பணியே இடம்பெற்றது. மக்களுக்காக கடையே
தவிர, கடைக்காக மக்கள் அல்ல என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டார்கள். எந்தக் கடையில்
கீரை வாங்கினாலும் பரவாயில்லை. வாடிக்கையாளர்களுக்கு திருப்தியடைய வேண்டும். இதுதான்
அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகையின் பின்னரான தற்போதைய
நிலவரம்.
அம்பாறை மாவட்டம் முஸ்லிம்
காங்கிரஸின் கோட்டை என்று சொல்லிக்கொண்டு திரிந்தாலும், அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர்
அல்லது ரவூப் ஹக்கீமின் வருகையின் பின்னர் அப்பிரதேசம் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.
மாற்றான்தாய் வீட்டுப் பிள்ளையாகவே முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தை நடாத்திவந்தது.
தேர்தல் காலங்களில் மாத்திரம்
பொந்துக்குள்ளிருந்து வெளிவரும் முஸ்லிம் காங்கிரஸ், பிரசாரங்களில் மாத்திரம் வீராப்பு
வசனங்களைப் பேசிவிட்டு, "ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்துவந்தான்..." என்ற
பாடலை ஒலிபரப்பிவிட்டு, "நாரே தக்பீர்" முழக்கங்களுடன் மக்களை உசுப்பேற்றி
வாக்குளைப் பெற்றுக்கொள்வார்கள். அத்துடன் அவர்களது கூடை நிறைந்ததும் மீண்டும் பொந்துக்குள்
சென்றுவிடுவார்கள்.
மக்களை இவ்வாறு காலம்காலமாக
ஏமாற்றிவரும் முஸ்லிம் காங்கிரஸுக்கு "மருந்து கட்டுவதற்காக" அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்கத் தயாரானது. ஐக்கிய தேசியக் கட்சியுடன்
இணைந்து கேட்பது சாதகமாகத் தென்படாத காரணத்தினால், முதன்முறையாக அங்கு தனித்துக் கேட்பதற்கு
முடிவெடுக்கப்பட்டது. புதிதாக உள்நுழைந்துள்ள அகில இலங்கை மக்கள் காரங்கிரஸுக்கு முஸ்லிம்
காங்கிரஸின் வாக்குகளே கிடைக்கவுள்ளன.
"கான மயிலாடக் கண்டிருந்த
வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடியதுபோல"
முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் மயிலுக்குப் போட்டியாக தனித்து மரச்சின்னத்தில்
களமிறங்கியுள்ளது. அமைச்சர் றிஷாத் பதியுதீனின் வாக்குளை சூறையாடுவுதற்காக வன்னியில்
களமிறங்கியுள்ள முஸ்லிம் காங்கிரஸ் அங்கு ஒரு ஆசனத்தையேனும் பெறப்போவதில்லை என்பது
வெள்ளிடைமலை.
திகாமடுல்ல மாவட்டத்தில்
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களுமே மக்கள் மனதை வெல்லாத
பழைய அரசியல்வாதிகளே. இவர்களில் ஒருவர் இறுதிநேரத்தில் மாற்றுக்குக் கட்சிக்கு தாவவிருந்தவர்
என்பது கொசுறுத் தகவல். கல்முனை வேட்பாளருக்கும், சம்மாந்துறை வேட்பாளருக்கும் அந்தந்த
பிரதேசங்களில் ஒரு நம்பிக்கையான மக்கள் ஆதரவு இல்லையென அங்கிருந்துவரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி
சபை வழங்குவதற்கு தடையாக இருந்தவர்கள் இன்று அதற்காக போராடியதுபோல சித்தரித்துக்காட்டப்படுகின்றனர்.
"மீனுக்கு தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும்" இவ்வாறான அரசியல்வாதிகள்
மக்களுக்காக எதனையும் சாதிக்கவில்லை. ஆகவே, இவர்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்துக்கு
அனுப்பி அங்குள்ள கதிரைகளை சூடாக்க வேண்டிய அவசியம்தான் என்ன?
மற்றுமொரு வேட்பாளர் பல்வேறு
குற்றச்சாட்டுகளுக்கு பெயர்போன ஒருவர். அதுகுறித்து அவர் வாய்திறக்காத காரணத்தினால்
மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பதுபோல மக்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். "அவர்
தவறு செய்திருந்தாலும் மன்னித்து வாக்களியுங்கள்" என்று கட்சித் தலைவர் அவருக்கு
சிபார்சு செய்கிறார். அவர் தவறிழைத்துள்ளார் என்று தெரிந்தும் மு.கா. அவரை களமிறங்கியுள்ளது
கட்சியின் வங்குரோத்து நிலைமையையே எடுத்துக் காட்டுகிறது.
"கல்லானாலும் கணவன்,
புல்லானாலும் புருஷன்" என்று மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டிருப்பதற்கு
இலங்கையின் எந்தவொரு அரசியல் சட்டத்திலும் சொல்லப்படவில்லை. பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
வழங்கப்படுவது மக்கள் சேவைக்காவே தவிர, வேறு எதற்காகவும் அல்ல. ஆனால், இவர்கள் மக்கள்
சேவையைத் தவிர்த்து வேறு தேவைகளையே நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இவ்வாறானவர்களை பாராளுமன்றத்தில்
தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான தேவை கட்சிக்கு இருந்தாலும், மக்களுக்கு இல்லை.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸினால்
அம்பாறை மாவட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து முஸ்லிம் பிரதேசங்களுக்கும்
"அரசியல் அதிகாரம்" வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதியளித்து வருகிறது. அந்த
"அரசியல் அதிகாரம்" கீரைக்கடையில் விற்கப்படுவதோ தெரியாது. "குடும்ப
ஆட்சி" போல கட்சித் தலைவரின் சகோதரருக்கு இம்முறை தேசியப்பட்டியல் வழங்குவதற்கு
பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், பெயரே இல்லாத அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல்
வழங்குவேன் என்றும் கட்சித் தலைவர் கூறிவருகிறார்.
முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள்,
குறிப்பாக திகாமடுல்ல வேட்பாளர்கள் தங்களுக்குள் கறிச்சட்டி சண்டை பிடித்துக்கொள்வதில்
கில்லாடிகள். ஒரே கட்சியாக இருந்தாலும் அவருக்கு வாக்களிக்காமல் எனக்கு வாக்களியுங்கள்
என்று நேரடியாகப் பேசுவார்கள். இதனை நன்கு அவதானித்த கட்சித் தலைமை மூவரையும் ஒன்றாக
இணைந்து பிரசாரம் செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளது.
அத்துடன் ஊருக்கொரு எம்.பி.
வேண்டுமானால் மூவருக்கும் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்யப்படுகிறது. இந்த
"ஊருக்கொரு எம்.பி." என்ற வார்த்தைப் பிரயோகமே பிரதேசவாதத்துக்கு வித்திட்டது
எனலாம். அவருடைய ஊருக்கு ஒரு எம்.பி. இருந்தால், எங்களது ஊருக்கும் ஒரு எம்.பி. வேண்டும்
என்று மக்களும் நினைக்கிறார்கள்.
"நமது ஊரில் ஒரு எம்.பி.
இருந்தால்தானே ஏதாவது பிரச்சினையென்றால் அவரிடம் சென்று முறையிடலாம்" என்று மக்கள்
நினைக்கின்றனர். ஆனால், மக்களுக்கு சேவைசெய்யாத "பம்மாத்து" அரசியல்வாதிகள்
ஊருக்குள் இந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? ஆனால், ஊருக்கொரு எம்.பி. என்ற பிரதேசவாதத்திருந்து
மக்கள் இப்போது தெளிவுபெற்றுள்ளார்கள். மஹிந்தவை கீழிறக்கிவிட்டு மைத்திரியை அரியணை
ஏற்றுவதற்கு வாக்களித்தவர்கள் இப்போது சமூகத்துக்கு பிரயோசனமில்லாத "டம்மி"
அரசியல்வாதிகளை இனம்கண்டுள்ளனர். அவர்களை நிராகரிப்பதற்கும் தயாராகிவிட்டனர்.
மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்
தேர்தல் பேசுபொருளாக இருந்த கரையோர மாவட்டக் கோரிக்கை தற்போது மைத்திரி ஆட்சியில்
கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாய்ந்தமருதுக்கு எப்போதா வழங்கவேண்டிய உள்ளூராட்சி சபையை
தடுத்தவர்களை கட்சியில் வைத்துக்கொண்டு, அதை இன்று தருவோம்... நாளை தருவோம்... என்று
ஏமாற்றிவருகிறார்கள். மக்கள் அதை நம்பமறுத்ததால், பிரதமர் ரணிலை கல்முனைக்கு அழைத்துவந்து
அதை அவரது வாயாலே சொல்லவைத்தார்கள்.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி
சபை வழங்குதென்றால் அதற்கு தனியானதொரு ஆணைக்குழு அமைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு
திரிகிறார்கள். "வேலைக் கள்ளிக்குப் பிள்ளைச்சாட்டு" என்பதுபோல இந்த இழுத்தடிப்பு
நடந்துகொண்டு வருகிறது. ஆனால், எதற்கெல்லாம் ஆணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்பதை
இவர்களுக்கு தெளிவாக சுட்டிக்காட்டவேண்டிய தேவையுள்ளது.
01. உள்ளூராட்சி மன்றம்
ஒன்றின் தேவை குறித்து அறிந்துகொள்ள அந்த உள்ளூராட்சி சபை ஆதிக்க எல்லைக்குட்படும்
மக்களிடம் கருத்துக் கோரல் 02. உள்ளூராட்சி சபையின் எல்லையை நிர்ணயம் செய்தல். மேற்படி
இரு முக்கிய விடயங்களை கருத்திற்கொள்ளுமிடத்து, சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபை என்ற
ஒன்று தேவையில்லை என்ற மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
அடுத்ததாக, எல்லை நிர்ணயம்
தொடர்பில் நோக்குமிடத்து சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு எல்லைகளே சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி சபைக்கான எல்லைகளாக அமைய வேண்டும் என்ற கருத்துகளே முன்மொழியப்பட்டுள்ளன.
சில அரசியல்வாதிகள் கூறுவதுபோல்,
ஆணைக்குழு அமைத்து எல்லை நிர்ணயம் செய்வதென்றால், சாய்ந்தமருதின் வடக்கு எல்லையாக இருந்த
ஆரம்பகால எல்லையான கல்முனைக்குடியின் தற்போதைய புதிய வீதி (புதிய வீதி - நியூ றோட்)
எல்லையினையா சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபைக்கான வடக்கு எல்லையாக நிர்ணயம் செய்ய
போகிறீர்கள் என்று இந்த அரசியல்வாதிகளை கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு உள்ளூராட்சி மன்றம்
அமைக்கும் விடயத்தினை உற்றுநோக்குமிடத்து, உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரத்தினைப் பயன்படுத்தி
ஒரு வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அமைக்க முடியும். கல்முனை நரக சபையாக்கப்பட்டது, கல்முனை
நரகசபை மாநகர சபையாக்கப்பட்டது, அக்கரைப்ற்று மாநகர சபை தரமுயர்த்தப்பட்டதடன், அக்கரைப்பற்றில்
புதிய பிரதேசசபை ஒன்று உருவாக்கப்பட்டது போன்று இன்னும் பல உதாரணங்களைக் கூறலாம்.
எனவே, சாய்ந்தமருதுக்கான
உள்ளூராட்சி மன்றத்தினை அமைக்க போதுமான அதிகாரத்தினை இலங்கை சனநாயக சோலிசக் குடியரசின்
அரசியலமைப்பு யாப்பு, உள்ளூராட்சி அமைச்சருக்குள்ள அதிகாரத்தினை தெளிவாக குறிப்பிடுகின்றது.
உள்ளூராட்சி சபைக்குள் உள்ளடங்கும்
பிரதேசமானது மாநகரசபை பிரதேசத்தில் அல்லது நகரசபைகள் கட்டளைச் சட்டத்தின் பொருளுக்குட்பட்ட
ஒரு பட்டணத்தில் அடங்கியிருப்பதான எவையேனும் இடப்பரப்புக்கள் நீங்கலாக உதவி அரசாங்க
பிரிவின்றொன்றின் எல்லைகளுக்கு நேரொத்தவனவாக இருத்தல் வேண்டும். அமைச்சரானவர் அதே கட்டளை
மூலம் அல்லது பின்னரான கட்டளை மூலம் அத்தகைய பிரதேசசபை இடப்பரப்புக்கு பிரதேச சபை ஒன்றினை
அமைக்கலாம் என்பதுடன் அத்தகைய சபைக்கு பெயரொன்றையும் குறித்தொதுக்கலாம். (1987ஆம் ஆண்டின்
15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உரிய பிரிவு)
இச்சட்டமானது பொதுவாக பிரதேச
சபை ஒன்றை உருவாக்குவது பற்றி குறிப்பிடுகின்றதே தவிர மாநகர சபையின் எல்லைக்குள் உள்ள
பகுதிகளை பிரித்தெடுத்து புதிதாக உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குவது பற்றியல்ல. இது
தொடர்பில் மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தில் தேடும்போது பின்வரும் முடிவுகளைப் பெறக்கூடியதாக
உள்ளது.
மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின்
உரிய பிரிவு 284 இன் 4ஆவது இடம்பெறும் 'டி' பிரிவானது சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கு
மிகவும் சாதகமாக உள்ளது. சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தினை அமைப்பதில் எவ்விதமான
சட்டச் சிக்கல்களும் இல்லை.
அப்படி சட்டச்சிக்கல் இருப்பதாக
கூறும் யாராவது இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட நலன்கள் சார்ந்த திட்டத்தில் இருந்து
முன்வைப்பதாகவே நாம் நம்புவதற்கு வேறு இதனைவிட வேறு ஆதாரம் வேண்டும்? அது மட்டுமன்றி
சாய்ந்தருதுக்கென ஒரு தனியான உள்ளூராட்சி சபை உருவாக்கப்படுவதன் ஊடாக கல்முனை மாநகர
சபை என்ற அந்தஸ்துக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படப்போவதில்லை.
எனவே, சாய்ந்தமருதுக்கு
உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்கும் விடயத்தினை வைத்து அரசியல்செய்து அதன்மூலம் வாக்குசேகரிக்க
முற்படும் சில அரசியல் சாணக்கியமற்ற அரசியல்வாதிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை விடயத்தில்
உதட்டில் தேனும் உள்ளத்தில் விஷத்துடனும் திரியாமல் சாய்ந்தமருது மக்களையும், ஊர்த்
தலைமையையும் கடந்த காலங்களில் ஏமாற்றியதுபோல் இன்னும் ஏமாற்ற முடியாது.
ஆணைக்குழு அமைத்தல், ஒப்புதல்
கடிதங்கள் பெறல், அமைச்சரை சந்தித்தல், ஏனைய ஊர் மக்களிடம் கருத்துக் கேட்டல் போன்ற
கருத்துகளைக் கூறி மக்களுக்கு மாயாஜாலம் காட்டாமல் உளத்தூய்மையுடன் செயற்பட்டு சாய்ந்தமருதுக்கு
உள்ளூராட்சி சபையை பெற்றுக்கொடுக்க ஆவணம் செய்வதற்கு இந்த அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.
திகாமடுல்ல மாவட்டத்தில்
ஐக்கிய தேசியக் முன்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியும், முஸ்லிம் காங்கிரஸும் போட்டியிடுகின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தேசிய காங்கிரஸ் போட்டியிடுகிறது. அகில இலங்கை
மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பன தனித்துப் போட்டியிடுகின்றன.
திகாமடுல்ல மாவட்டத்தில்
ஐக்கிய தேசிய முன்னணி 150,000 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
80,000 வாக்குளையும், தமிழரசுக் கட்சி 50,000 வாக்குகளையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
35,000 வாக்குளையும் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பிரகாரம் ஐ.தே.மு. 4 ஆசனங்களையும்,
ஐ.ம.சு.கூ., த.தே.கூ. மற்றும் அ.இ.ம.கா. என்பன தலா ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொள்ளும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களில் ஒருவர் மாத்திரமே விருப்புவாக்குகளின்
அடிப்படையில் தெரிவாகும் சந்தர்ப்பம் உள்ளது. அத்துடன் போனஸ் ஆசனம் ஒன்றும் வழங்கப்படலாம்.
எப்படியிருந்தாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு ஒரு ஆசனம் கிடைத்தாலே அது முஸ்லிம்
காங்கிரஸுக்கு பாரிய தோல்வியாகும். ஆனால், இறுதிமுடிவுகள் வரும்வரை இவையெல்லாம் ஒரு
ஊகமாகவே கருதப்படும்.
பழையவர்களின் சுயபுரணாம்
தெரியும் என்பதால் ஒருமுறை புதியவர்களுக்கும் சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம்.
யார் எந்தக் கட்சியில் பாராளுமன்றம் சென்றாலும் பரவாயில்லை. அவர்கள் மக்களுக்கு சேவைசெய்யக்கூடியவர்களாக
இருக்கவேண்டும். இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தோல்வியுற்றாலும் பரவாயில்லை.
யாரும் இல்லையென்று ஆட்டம்போட்ட முஸ்லிம் காங்கிரஸுக்கு இப்போது போட்டிக்கு ஆள்
கிடைத்தாயிற்று. எனவே, அவர்கள் மக்களை கைக்குள் வைத்திருப்பதற்காக "இனிமேல்"
சேவைசெய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
அம்பாறை மாவட்ட வருகையால் முஸ்லிம் காங்கிரஸ் விழித்துக்கொண்டது. இனி அவர்களின் கீரைக்கடை
நுகர்வோரை திருப்திப்படுத்தும் வகையில் இயங்குவதற்கு எத்தனிக்கும். அதுவே இந்த வருகையினால்
மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
(நன்றி: நவமணி)