துருக்கியை சேர்ந்த தனியார் நிறுவனம் அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 169 கோடி ரூபாயை போனஸ் தொகையாக வழங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.
துருக்கியை சேர்ந்த எமக்சேபெதி எனும் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 'ஆன்லைன்' முறையில் உணவுப் பொருட்களை சப்ளை செய்து வருகிறது. இந்நிறுவனத்தை அதன் நிறுவனர் நெவ்ஜாத் ஐதீன் பல கோடி ரூபாய் லாபத்திற்கு வேறு ஒரு நிறுவனத்திடம் விற்றார். இந்த லாபத்தில் ஒரு பகுதியை தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்க விரும்பினார்.இதையடுத்து 169 கோடி ரூபாயை ஊழியர்களுக்கு போனசாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன்படி அங்கு பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும். இதனால் அந்நிறுவனத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளனர்.ஐதீனின் இந்த செயலால் அந்நிறுவன ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பலர் தங்கள் முதலாளிக்கு கடிதம் மூலமும் நேரில் சென்றும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஐதீன் கூறுகையில் ''நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஊழியர்களுக்கு லாபத்தில் பங்களிப்பதே நியாயமானது. இதை என் தனிப்பட்ட நிறுவனமாக பார்க்கவில்லை; அனைவரும் சேர்ந்து உழைத்ததால் தான் இவ்வளவு பெரிய தொகை கிடைத்துள்ளது'' என்றார்.