GuidePedia

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 05வது தேசிய செயற்குழு நேற்று (08.08.2015) காலை 10 மணி முதல் மாலை 05.30 மணி வரை SLTJ தலைமையகத்தில் நடைபெற்றது.
ஜமாத்தின் தேசிய தலைவர் சகோ. ஆர்.எம். ரியாழ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். எதிர்கால தஃவா செயல்பாடுகள், சமுதாயப் பணிகள் மற்றும் அரசியல் கள நிலவரம் தொடர்பான விடயங்கள் இதில் பேசப்பட்டன.
இறுதியாக செயற் குழுவின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 05வது செயற்குழு தீர்மானங்கள்

=>20வது அரசியல் சீர்திருத்தம் தொடர்பாக 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிரிசேன அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டதைப் போல் 19ம் அரசியல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து 20வது அரசியல் சீர்திருத்தத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முனைப்புக் காட்டியது. கடைசி நேரத்தில் சில காரணங்களினால் அது முடியாமல் போனது. தேர்தலின் பின்னரான புதிய அரசாங்கத்தின் மூலம் 20வது சீர்திருத்தத்தை நடை முறைப்படுத்துவது என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
20வது அரசியல் சீர்திருத்தம் என்பது சிறுபான்மை மக்களின் உரிமைகள், அபிலாசைகளை பாதிக்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற உறுப்புரிமை குறைவடையும் வாய்பும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.ஆகவே, புதிய அரசு 20ம் சீர்திருத்தத்தை கொண்டு வரும் போது, சிறுபான்மை மக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத அளவு சீர்திருத்தம் அமையப் பெற வேண்டும். சிறுபான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இச்செயற்குழு ஜனாதிபதியிடம் வேண்டிக் கொள்கின்றது. 
=>ISIS பயங்கரவாதம் தொடர்பில் 
ஈராக், சிரியா உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ISIS தீவிரவாத அமைப்பு என்பது உலகில் உள்ள அனைத்து தீவிரவாத அமைப்பை விடவும் பயங்கரமானதாகும். சர்வதேச மட்டத்தில் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் இவ்வமைப்பு தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இஸ்லாம் கற்றுத் தரும் போர் நெறிமுறையான ஜிஹாதை தவறாக புரிந்து கொண்ட இந்த அமைப்பினர் தாம் இஸ்லாத்திற்காக போராடுவதாக கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களையும், ஊடகவியலாளர்களையும், கொலை செய்வதுடன், கைதியாக பிடிக்கப்படுபவர்களை தீயிட்டு எறித்து கொலை செய்யும் காரியத்தில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். தீயிட்டு கொலை செய்வது என்பது இஸ்லாம் வன்மையாக கண்டித்த செயலாள இருக்கும் போது, ஜிஹாதின் பெயரால் இவர்கள் செய்யும் இந்த அநியாயங்கள் இஸ்லாத்தின் நற்பெயருக்கு கேடாக அமைந்துள்ளது.
ISIS என்ற இந்த இயக்க செயல்பாடுகளுக்கும் புனித இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பொது மக்கள் இவர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.

அத்துடன், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் ISIS இயக்கத்தில் இணைந்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் போன்றதொரு தோற்றத்தை பொது பல சேனா உள்ளிட்ட இனவாத அமைப்புகள் உண்டாக்க முயல்கின்றன. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்த வரையில் எக்காலத்திலும் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. நிலைமை இவ்வாறிருக்கும் போது, பெரும்பான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும் விதமாக பரப்புரை மேற்கொள்ளும் பொது பல சேனா போன்ற இனவாத இயக்கங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச் செயற்குழு  வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், ISIS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதின் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசிடம் இச் செயற்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.

=>அலுத்கம கலவரம் தொடர்பில்
முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அலுத்கம, பேருவலை மற்றும் தர்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் பொது பல சேனாவின் இனவாத செயல்பாடு காரணமாக முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில், இரண்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, கோடிக் கணக்கான சொத்துக்கள் அழிக்கப்பட்டமை நாடறிந்ததே!
குறித்த கலவரம் தொடர்பில் நீதி விசாரனை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் தரப்பில் தொடர்ந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இறுப்பினும் இது வரைக்கும் கலவரத்திற்குக் காரணமான எவறும் தண்டிக்கப் பட வில்லை. ஆகவே ஆளும் புதிய அரசு குறித்த கலவரம் தொடர்பில் நீதி விசாரனை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை காலம் தாழ்த்தாது வழங்க வேண்டும் என்று இச் செயற் குழு வேண்டிக் கொள்கின்றது.
=>மீள் குடியேற்றம்
வட, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விடுதலைப் புலி தீவிரவாதிகளினால் சொந்த ஊரை விட்டும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம், அனுராதபுரம், கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகளாக வாழ்ந்து வருகின்றார்கள். யுத்தம் நிறைவடைந்து சமாதானம் மலர்ந்துள்ள இந்நிலையில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றப் படாமல் இருப்பது கண்டிக்கத் தக்கதாகும்.யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு சமுதாயம் இன்றும் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றது.வடக்குப் பகுதியில் யுத்தத்தினால் தமது காணிகளை இழந்த மக்களுக்கு கடந்த ஜனவரி 08ம் தேதி ஆட்சி மாற்றம் வந்த பின்னர் சுமார் 3000ம் ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் விடுவித்து கொடுக்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்களுக்கு அவர்களுடைய சொந்த காணிகள் இவ்வாறு வழங்கப்பட வில்லை.

ஆகவே அரசு இவ்விடயத்தில் கூடிய கவனம் எடுத்து முஸ்லிம்களை மீள் குடியேற்றம் செய்யும் காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று இச் செயற்குழு கோரிக்கை வைக்கின்றது.
=>வில்பத்து பிரச்சினை
வில்பத்து வனத்தை அழித்து முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்தும் முஸ்லிம்கள் வில்பத்து பகுதியை ஆக்கிரமிப்பதாகவும் பொய்யான செய்திகளை ஊடகங்களும், அரசியல்வாதிகளும், இனவாதிகளும் பேசியும், பரப்பியும் வருகின்றார்கள்.

வில்பத்து பிரச்சினையைப் பொருத்த வரையில் வில்பத்து வனப்பகுதியில் ஒரு அங்குலத்தையேனும் முஸ்லிம்கள் கைப்பற்றவோ, அழிக்கவோ இல்லை. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமை நிர்வாகம் வில்பத்து பகுதிக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு பிரச்சினை தொடர்பான உண்மையை கண்டறிந்தது.
முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கும், வில்பத்து வனப் பரப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அங்கு வாழும் முஸ்லிம்கள் பூர்வீகமாகவே அங்கு வாழ்பவர்கள். நிலைமை இவ்வாறு இருக்கும் போது இனவாதத்தை தூண்டும் விதமாக வில்பத்து வனத்தை முஸ்லிம்கள் அழிக்கின்றார்கள் என்று பரப்புரை செய்வதை இச் செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

அத்துடன் வில்பத்து வனப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்த கருத்தும் போதிய தேடுதல், ஆய்வு, கண்கானிப்பு இன்றி வெளியிடப்பட்ட கருத்தே தவிர, அது உண்மை நிலவரம் அல்ல என்பதை இச் செயற்குழு வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றது.
அத்துடன், வில்பத்து வனப்பகுதி என்று இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளையும் அரசு உடனடியாக விடுவித்துக் கொடுப்பதுடன், அங்கு வாழும் மக்களுக்குறிய வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் இச் செயற்குழு அரசை வேண்டிக் கொள்கின்றது.
=>பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக
பாராளுன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள இந்நிலையில் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் முஸ்லிம் சமுதாயம் விழிப்போடு இருக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் நாம் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கின்றோமோ, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் கட்சியாக, முஸ்லிம்களின் வாழ்வுரிமை, வழிபாட்டு உரிமை, வியாபாரம், கல்வி, கலாசாரம் போன்றவற்றை பாதுகாக்கக் கூடிய கட்சியாக இருக்க வேண்டும். எமது வாக்குகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி விட்டு, எம்மையே அழிக்கும் காரியத்தில் ஈடுபடும் ஆட்சியாளர்களை நமது வாக்குகள் மூலம் நாமே உண்டாக்கும் காரியத்தில் ஈடுபடக் கூடாது. கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று, சிறுபான்மைக்கு எதிராக செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு இம்முறை நமது வாக்கு பலத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொது மக்களை இச் செயற்குழு வேண்டிக் கொள்கின்றது.



 
Top