(நேர்காணல்-எஸ்.அஷ்ரப்கான்)
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்திகாமடுல்ல தேர்தல் தொகுதியின் கல்முனை வேட்பாளராகப் போட்டியிடும் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் அவர்களுடனான நேர்காணல்
கேள்வி: சமூக சேவைகளில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று ஏன் நினைத்தீர்கள்.?
பதில்: நேரடியாக கூறினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு சிறந்த தலைமைத்துவம் இல்லாமை எனது மனதை மிகவும் வேதனைப்பட வைத்தது. முஸ்லிம் சமூகம் பற்றிய எவ்வித முன்மொழிவுகளும் இல்லாத நிலையில் இருக்கும் முஸ்லிம் தலைமைகளுக்கு மத்தியில் சிறந்த ஆளுமையை அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் நான் கண்டேன். அதனால் அந்தக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் குதித்து கல்முனை மக்கள் மட்டுமல்லாது இலங்கை வாழ் முஸ்லிம்களுக்குரிய மர்ஹூம் அஷ்ரபின் அடியொட்டிய பாதையை செப்பனிட்டு சிறப்பாக வழிநடாத்த வேண்டிய பொறுப்பை அமானிதமாக ஏற்கும் செயற்பாட்டின் வெளிப்பாடுதான் எனது அரசியல் பிரவேசமாகும்.
கடந்தகால அரசியல் நகர்வுகளை எனது துறைசார்புடன் அவதானத்திற்கும் ஆய்வுக்கும்உட்படுத்தி வந்துள்ளேன். மக்கள் நம்பிய அரசியலினூடான போதியளவு திருப்தியைஅவர்கள் அடைந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். இம் மக்களுக்கானதேவையினை நிறைவேற்றுவது என் போன்றவர்களின் கடமையாக நான் உணர்கின்றேன்.
மக்களின் உண்மையான உணர்வுப் போராட்டத்திற்கான பாதையாக அமைச்சர் றிஸாட்தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை அடையாளம் கண்டேன்.
எமது அணியினூடாக ஆரம்பிக்கின்ற இப்பயணத்தில் முடிந்ததைச் செய்து விட்டுஎதிர்கால இளம் அரசியலுக்கான பாதை வழிப்படுத்தலை மேற்கொள்ளவே இக்களத்தில்இறங்கியுள்ளேன். படித்தவர்களை அரசியலில் உள்வாங்கி அதனுாடாக எதிர்கால சமூகத்திற்கு சிறந்த ஆளுமை மிக்க தலைவர்களை உருவாக்குவதே எமது இப்போதைய முக்கிய பணியாகும்.
கேள்வி: நீங்கள் உங்கள் அரசியல் பிரவேசத்திற்காக அகில இலங்கை மக்கள்காங்கிரஸை தெரிவு செய்த காரணம் என்ன ?
பதில்: உண்மையில் நமது நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் தொட்டு ஏற்பட்டு வருகின்ற ஜனநாயக மாற்றம் அம்மாற்றத்தில் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட்டுள்ளன.மக்களின் விருப்பத்தினை முதலில் அனுசரித்த முஸ்லிம் தலைவராக அமைச்சர்றிஸாதை மக்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் ஏற்பட்டுள்ள மிகவும் தெளிவான அரசியல் அலை இன்று வடக்கில் மட்டுமல்லாது கிழக்கிலும் காலுான்ற வைத்துள்ளது. இப்பிரதேசங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த மு.கா. வை அ.இ.ம.கா. கட்சியின் வருகை வாயில் விரல் வைக்க வைத்துள்ளது.
இதற்கு அடிப்படைக்காரணம் மு.கா. வை மக்கள் வெறுக்கின்ற இந்த சூழலில் எமதுவேட்பாளர்கள் சகல பிரதேசங்களிலும் உள்ள மக்கள் நன்மதிப்பைப் பெற்றவர்களாகஇருப்பது ஆகும். மக்கள் மாற்றத்தை வேண்டியிருக்கின்ற சூழலில் எமது கட்சியின் வருகையானது மிகவும் காலத்தின் தேவையாக உணரப்பட்டுள்ளதால் நாம் இந்தக் கட்சியையும், கட்சித் தலைமையையும் ஒரு முஸ்லிம் விடிவுக்கான பயணத்திற்கு உரிய கட்சியாக ஏற்றுக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த முடிவின் பிரகாரமே நாம் இந்த முடிவை எடுத்தோம்.
கேள்வி: முஸ்லிம்களின் அரசியல் அடிநாதம் மு.கா. வின் கோட்டை என வர்ணிக்கப்படும் கல்முனையில் நீங்கள் களமிறங்கி இருக்கிறீர்கள். திகாமடுள்ள பிரவேசம் உங்களுக்கு ஒரு சவாலாக அமையாதா ?
பதில்: நிச்சயமாக இதனை நான் ஒரு சவாலாகவே ஏற்றுள்ளேன். அபிவிருத்தியில் பின்தங்கியிருக்கும் கல்முனை மாநகரை அபிவிருத்தி செய்வதற்கு முன்னைய ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை அவர்கள் பயன்படுத்த தவறியுள்ளதால் மக்கள் மாற்றத்தை எதிர்பாரக்கின்றார்கள். எமக்கு ஒரு வாய்ப்பு தந்தால் அதனை சாதித்துக்காட்ட எம்மிடம் முன்மொழிவுகள் உள்ளன. இன்று பார்த்தால் கல்முனை மாநகரம் வெட்கமாக உள்ளது இதனை குறிப்பிடுவதற்கு, கல்முனை மா நகரம் எந்தவித அபிவிருத்தியும் இல்லாமல் ஒரு சோக மயமான நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நாம் அபிவிருத்தி தாகத்தை எமது கட்சியின் ஊடாக கொண்டு வருவோம். கல்முனை சந்தையை பாருங்கள், கல்முனை பொது நுாலகத்தை பாருங்கள், பஸ்தரிப்பு நிலையத்தை பாருங்கள் எல்லாம் அபிவிருத்திக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றது. இத்தனைக்கும் அதிகாரத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முதல்வர் எல்லோரும் இருக்கின்றார்கள். ஆனால் அபிவிருத்தியில்லை.
கடந்த கால மஹிந்தவின் ஆட்சியில் ஒவ்வொரு நோன்பு காலத்திலும் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள், மார்க்கக் கடமைகளை செய்ய பயந்திருந்தார்கள். கிறீஸ் மனிதன் பிரச்சினை, பேருவளை தர்ஹா நகர் பிரச்சினை என்று பல்வேறு ரூபங்களில் பிரச்சினைகள் வந்து நிம்மதி இழந்த நிலையில் இருந்தபோது எமது முஸ்லிம் தலைமைகள் எங்கு இருந்தது. ஆனால் நாங்கள் மஹிந்தவை துரத்தியடித்த பிறகுதான் இம்முறை நோன்பை அமைதியாகவும், அச்சமின்றியும் கழித்தோம்.
முஸ்லிம் தலைமையான றிஷாட் பதியுதீன் துணிந்து உயிரையும் துச்சமென எண்ணி களத்தில் குதித்த பிறகே மக்களின் நலனில் அக்கறை கொண்வர்களாக பச்சோந்திகள் போல் வந்து ஒட்டிக்கொள்ளும் தலைமைகள் எமக்கு வேண்டாம் என்கின்ற மக்களின் விருப்பப்படியே நாம் இன்று களத்தில் குதித்திருக்கின்றோம். அதனால் எமக்கு முன் எந்த சவால் வந்தாலும் அதனை ஏற்க தயாராக உள்ளோம். மக்களின் விடிவிற்காக நாம் எதனையும் செய்வோம்.
கேள்வி: மாற்றம் என குறிப்பிட்டுள்ளீர்கள் என்னவகையான மாற்றத்தை நீங்கள் ஏற்படுத்த உள்ளீர்கள் ?
பதில்: மக்களின் பிரதேச அபிவிருத்தி, கல்வி, சிந்தனை மாற்றம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்,குறிப்பாக இப்பிரதேச இளைஞர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்டவைகளில்அதிக அக்கறை காட்ட வேண்டிய தேவையுள்ளது. விளையாட்டுக்கான பொறிமுறை ஒன்றுஉருவாக்கப்பட வேண்டும். எனவே நாம் குறிப்பிடும் மாற்றம் என்பது சமூக மாற்றத்தினுாடாக சகல துறைகளிலும் அபிவிருத்தியை கொண்டுவருவதுடன், ஆராக்யமான சகல உரிமைகளும் பெற்றுக்கொண்ட சமூகமாக மக்களை மாற்றுவதுதான எமது மாற்றத்தின் முக்கிய கருபடபொருளாகும். அதேவேளை எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை முஸ்லிம்கள் இன்று இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில் உள்ளனர். முதலாவது தேர்தல் திருத்தச் சட்டமூலம், இரண்டாவது சர்வதேச அழுத்தங்களின் அடிப்படையில் சிறுபான்மைகளுக்கான தீர்வு என்ற இரு விடயங்களும் மிகவும் விரைவாக ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாய அளுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்ற கேள்விக்கு எமது முஸ்லிம் தலைமைகளின் விடைகாண முடியா துரதிஸ்ட நிலை காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் பாராளுமன்றில் முழங்குகின்ற ஒரு சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவை நாம் அ.இ.ம.கா.வினால் ஏற்படுத்தி அதனுாடாக எமது தேவைகளை பெற எத்தனிக்கின்றோம் எனவே இறுதியாக மக்கள் எமது மக்கள் காங்கிரஸின் கைகளை பலப்படுத்துமாறு வேண்டுகின்றேன்.