தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு நடாத்தப்படும் பகுதி நேர வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கால வரையறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னதாக பரீட்சை நடைபெறுவதற்கு 5 தினங்கள் இருக்கும் போது பகுதி நேர வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.எவ்வாறாயினும் அமைச்சரின் ஆலோசனைக்கமைய இந்த கால எல்லை 3 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு 3 நாட்கள் இருக்கும் போதே பகுதி நேர வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகளை நடத்துதல் மற்றும் மாதிரி வினாப்பத்திரங்கள் விநியோகித்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.